காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மருத்துவர் இராமதாஸ்  கடிதம்.

வறட்சி மாவட்டமான தரும்புரி மாவட்டத்தை செழுமையான மாவட்டமாக மாற்றுவதற்காக தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்; அதற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம்:

அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு,

தருமபுரி மாவட்டத்தில் நிலவும் வறட்சியைப் போக்கி, வளம் கொழிக்கும் மாவட்டமாக மாற்றுவதற்காக காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தக் கோருதல் – தொடர்பாக

தமிழ்நாட்டில் கடுமையான வறட்சி நிலவும் மாவட்டங்களில் ஒன்றாகவும், பிழைப்புக்காக வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அதிக அளவில் இடம் பெயர்ந்து செல்லும் மக்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாவட்டங்களில் ஒன்றாகவும் விளங்கும் தருமபுரி மாவட்டத்தின் குடிநீர் மற்றும் பாசன நீர்த் தேவைகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டம் குறித்து தங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்தக் கடிதத்தை தங்களுக்கு நான் எழுதுகிறேன்.

தருமபுரி மாவட்டத்தின் மக்கள்தொகை 2019-ஆம் ஆண்டின் நிலவரப்படி 15.92 லட்சம் ஆகும். இவர்களில் சுமார் 5 லட்சம் பேர் வாழ்வாதாரம் தேடி இடம் பெயர்ந்துள்ளனர். ஒரு மாவட்டத்தின் மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் பிழைப்பு தேடி வெளியூர் சென்றுள்ளனர் என்பதிலிருந்தே அந்த மாவட்டம் எந்த அளவுக்கு பின்தங்கியுள்ளது என்பதை அறியலாம். சிலர் குடும்பமாகவும், வேறு சிலர் தனியாகவும் சென்றிருக்கிறார்கள். மொத்தமாகப் பார்த்தால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்பங்களில் 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான குடும்பங்களில் இருந்து குறைந்தபட்சம் தலா ஒருவராவது வெளி மாநிலம் அல்லது வெளி மாவட்டங்களுக்கு சென்றிருக்கிறார்கள். இதற்கு காரணம் தருமபுரி மாவட்டத்தில் தொழில் வளமும், பாசனத்திற்கான நீர் வளமும் இல்லாதது தான்.

தருமபுரி மாவட்டத்தின் முதன்மைத் தொழிலும், வாழ்வாதாரமும் விவசாயம் தான். தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 49,777 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயம் நடைபெறுகிறது. ஆனாலும், அதில் ஒரு லட்சத்து 95,740 ஹெக்டேர் நிலங்கள் மட்டும் தான் பாசன வசதி பெற்றவை ஆகும். அதாவது தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொத்த வேளாண் நிலப்பரப்பில் 43.52 விழுக்காடு நிலங்கள் மட்டுமே பாசன வசதி பெற்றவை ஆகும். மீதமுள்ள 56.48% நிலங்களில் மழையை நம்பி தான் விவசாயம் நடைபெறுகிறது. ஆனால், தருமபுரி மாவட்டத்தில் மழை அளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதன் காரணமாக வறட்சியின் கொடுமை நீடிக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணை, கேசரகுழிபள்ளம் அணை, சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, தொப்பையாறு அணை, நாகாவதி அணை, பஞ்சப்பள்ளி அணை, வரட்டாறு அணை, வள்ளிமதுரை அணை, வாணியாறு அணை ஆகிய 10 அணைகளும் வறண்டு கிடக்கின்றன.தருமபுரி மாவட்ட மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். அம்மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 10,300 குடும்பங்கள் உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளன. அவர்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் குடும்பங்கள் சிறு, குறு விவசாயிகள் என்பதால் அவர்களால் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை ஏற்படுத்த இயலாது. அவர்களுக்கு போதிய பாசன வசதிகளை செய்து தராவிட்டால் தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் படிப்படியாக அழிந்து விடும்.

தருமபுரி மாவட்டத்தில் விவசாயம் அழிவதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே காவிரி ஆற்றில் ஓகனேக்கல் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி நீரை நீரேற்றும் மின் மோட்டார்கள் மூலம் இறைத்து குழாய்கள் மூலம் கொண்டு சென்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் நிரப்புவதற்கான, ‘‘தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை’’ செயல்படுத்தலாம் என்ற யோசனையை, தமிழக அரசின் பரிசீலனைக்காக பாட்டாளி மக்கள் கட்சி முன்வைக்கிறது.

தருமபுரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 10 அணைகள், 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உட்பட மொத்தம் 1230 நீர்நிலைகள் உள்ளன. இவை அனைத்தையும் நிரப்புவதன் மூலம் 3 டி.எம்.சி அளவுக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தர்மபுரி மாவட்ட பாசனத்திற்கு இது பெரும் துணையாக இருக்கும். ஓகனேக்கல் பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக தண்ணீர் எடுக்கும் பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி தண்ணீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து 1230 நீர்நிலைகளிலும் நிரப்புவதே தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் ஆகும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதானது ஆகும். ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஏற்கனவே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை செல்லும் பாதையிலேயே இந்தத் திட்டத்திற்காக குழாய்களை அமைத்து தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு இடையே நீர் செல்லும் பாதை மன்னர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்டிருப்பதால் சில ஏரிகளில் நிரப்புவதன் மூலம் அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீரை கொண்டு செல்ல முடியும்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். அதுமட்டுமின்றி, 15 லட்சம் பேருக்கு குடிநீர் வசதி கிடைக்கும். இத்திட்டத்திற்காக ரூ.650 கோடி மட்டுமே செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக காவிரியில் இருந்து 3 டி.எம்.சி அளவுக்கு மட்டும் தான் தண்ணீர் எடுக்கப்படும். இது யாரையும் பாதிக்காது. இது குடிநீர் திட்டமும் கூட என்பதால் இத்திட்டத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பில்லை.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தருமபுரி மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு, 10 லட்சத்திற்கும் கூடுதலான கையெழுத்துகள் பெறப்பட்டு, முதலமைச்சராகிய தங்கள் வசம் பா.ம.க. இளைஞரணித் தலைவரும், அப்போதைய தருமபுரி மக்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையிலான குழுவினரால் வழங்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டு மார்ச் 5-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையிலான குழு சந்தித்து காவிரி உபரி நீர் பாசனத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டது. அப்போது அத்திட்டத்தை செயல்படுத்த தாங்களும் ஒப்புதல் அளித்து இருந்தீர்கள். அதன்பின் மக்களவைத் தேர்தலின் போது தருமபுரி தொகுதியில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை ஆதரித்து பரப்புரை செய்த போது, காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று 9 இடங்களில் உறுதி அளித்தீர்கள். ஆனால், தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகளாகியும் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி தாங்கள் தருமபுரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட போது, தங்களை பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் குழு சந்தித்து தருமபுரி மாவட்ட காவிரி உபரி நீர்த் திட்டத்தை செயல்படுத்தக் கோரி மனு அளித்தனர். ஆனாலும், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தமிழக அரசுத் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.

தமிழகத்தின் முதலமைச்சராக தாங்கள் பதவியேற்றதற்கு பிந்தைய கடந்த 4 ஆண்டுகளில் அத்திக்கடவு – அவினாசி திட்டம், மேட்டூர் உபரி நீர்த் திட்டம் உள்ளிட்ட பல நீர்ப்பாசனத் திட்டங்கள் செயல்வடிவம் பெற்றுள்ளன. காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ.14,000 கோடி செலவில் நிறைவேற்றப்படும் என்று அண்மையில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட போது அறிவித்தீர்கள். ஒவ்வொரு ஆண்டும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக சராசரியாக ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2020-21 ஆம் ஆண்டில் நீர்வளத் துறைக்காக ரூ. 6991.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வரவேற்கத்தக்கவை; பாராட்டத்தக்கவை.

தருமபுரி மாவட்ட காவிரி உபரி நீர் திட்டத்திற்கான மொத்த செலவு என்பது நீர்வளத் துறைக்கான ஆண்டு ஒதுக்கீட்டில் பத்தில் ஒரு பங்குக்கும் குறைவு தான். அதனால் கிடைக்கும் பயன்கள் ஏராளம். அதைக் கருத்தில் கொண்டு தருமபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்துவதற்கும், அதற்காக நிதியை ஒதுக்குவதற்காகவும் ஆணையிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.