கஜேந்திரனைக் கடுமையாகச் சாடிய டக்ளஸ்.

கஜேந்திரனைக் கடுமையாகச் சாடிய டக்ளஸ்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களைக் காட்டிக்கொடுப்பதற்கும், தான் ஆரம்பத்தில் நாடாளுமன்றம் வந்திருந்த கூட்டுக் கட்சிகளைப் பலவீனப்படுத்துவதற்குமான இரகசிய வாக்குறுதியைச் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுத்தே இலங்கை திரும்பியவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்.

இவ்வாறு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மேலும் தெரிவித்ததாவது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற  உறுப்பினர் கஜேந்திரன், எனது பெயரையும், எனது கட்சியின் பெயரையும் குறிப்பிட்டு, தவறான அதாவது ஏற்கனவே இத்தகையவர்களால் காலங்காலமாக கூறப்பட்டு, அவற்றில் எவ்விதமான உண்மைகளும் இல்லை எனச் சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட சில அபாண்டமான விமர்சனங்களை மீண்டும் முன்வைத்துள்ள்ளார்.

போர் நிலவிய காலத்தில், வடக்கிலிருந்த இலங்கை இராணுவத்தினருக்கு 40 ஆயிரம் சவப் பெட்டிகளை அனுப்பி வைக்குமாறு இந்தச் சபையிலே கூவிவிட்டு, எமது மக்களைப் பலிக்கடாக்களாக்கிவிட்டு, எமது மக்களுக்கு பயனில்லாத தாம் சார்ந்த கூட்டம் தோல்வியைத் தழுவும் என்பதை அறிந்து, முன்கூட்டியே வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்தான் கஜேந்திரன் எம்.பி.

இங்கே மக்கள் அவலங்களுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கையில், வெளிநாட்டில் திருமணம் செய்து குடும்பம் நடத்திவிட்டு, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களைக் காட்டிக் கொடுப்பதற்கும், தான் ஆரம்பத்தில் நாடாளுமன்றம் வந்திருந்த கூட்டுக் கட்சிகளைப் பலவீனப்படுத்துவதற்குமான இரகசிய வாக்குறுதியை சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுத்தே இலங்கை திரும்பிய இவர், காட்டிக் கொடுப்பது பற்றி கதைப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கையாக இருக்கின்றது.

புலித் தலைமையினது கள்ள வாக்கு ஒத்துழைப்பால் போர் நிலவிய காலகட்டத்தில் நாடாளுமன்றம் வந்த இவரை, அடுத்தடுத்த பொதுத் தேரதலில் எமது மக்கள் துரத்தியடித்தனர். தற்போதுகூட தேசியப் பட்டியலில் தொங்கிக்கொண்டு வந்துவிட்டு, மீண்டும் பழைய ஊளைகளை இட்டுக் கொண்டு, அனைத்துத் தரப்பினராலும் வாங்கிக் கட்டிக்கொண்டு வருகின்றார்.

போர்க்காலத்தின் இடைநடுவில் சமாதான ஒப்பந்தம் நிலவியபோது, எமது மக்களிடையே நல்ல பெயரைச் சம்பாதிருந்திருந்த ஒரு பொலிஸ் அதிகாரியை சமாதானம் பேசுவதற்காக அழைத்துச் சென்று கழுத்தறுத்துக் கொலை செய்ததில் முன்னின்ற இவரைப் போல் நாங்கள் ஒருபோதும் செயற்பட்டதில்லை. செயற்படப் போவதும் இல்லை.

இரத்தக் கறைபடிந்த இவரது கொலை, கொள்ளை, நிதி மோசடிகள் தொடர்பில் இவரது கட்சியின் தேசிய அமைப்பாளர் இப்போது பகிரங்கமாக அறிவித்துக்கொண்டிருக்கின்றார்” – என்றார்

Leave A Reply

Your email address will not be published.