ஹிருணிகாவின் இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை… என்கிறார் ரஞ்சித் மத்தும பண்டார.
ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை கட்சி தலைமை ஏற்க மறுத்துள்ளதாகவும், அவர் தொடர்ந்தும் ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளராக செயற்படுவார் எனவும் SJB பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ரஞ்சித் மத்துமபண்டார, ஹிருணிகா பிரேமச்சந்திர தனது இராஜினாமா குறித்து அறிவித்துள்ள போதிலும், அந்தக் கடிதத்தை ஏற்றுக்கொள்ள கட்சி தயாராக இல்லை என தெரிவித்தார்.
“ஐக்கிய மகளிர் சக்தியின் தேசிய அமைப்பாளராக திருமதி பிரேமச்சந்திரவை தொடருமாறு நாங்கள் கோரிக்கை விடுத்தோம். அவர் அதற்கு சம்மதித்திருக்கிறார். அதேவேளை, தேர்தல் பிரசாரத்தின் போது, ஹிருணிகா பிரேமச்சந்திரவால் ஐக்கிய மகளிர் சக்திக்காக பணியாற்ற முடியாமல் போனால், அந்தப் பணிகளை மேற்பார்வையிட, கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த மற்ற பெண்களும் உள்ளனர். அவர் வேட்பாளராக இருப்பதால், கொழும்பு மாவட்டத்தில் கவனம் செலுத்த கட்சி அனுமதித்துள்ளது…” என்றார்.
ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தோல்விக்கு கட்சியில் எவரும் அமைப்பாளர்கள் மீது குற்றம் சுமத்தவில்லை எனவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.