கொரோனா’ ஊடுருவியுள்ளது : இராணுவத் தளபதி! – இல்லை : சுகாதார அமைச்சர்

கொரோனா’ சமூகத்துக்குள் ஊடுருவியுள்ளது என்கிறார் இராணுவத் தளபதி! – இல்லை என்கிறார் சுகாதார அமைச்சர்

இலங்கையில் மூன்றாவது அலையாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் ஊடுருவியுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஆனால், இலங்கையில் இன்னமும் சமூகத் தொற்று ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறியுள்ளார்.

இதுவரை 18 மாவட்டங்களில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணாதவர்களும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சமூகத்துக்குள் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தற்போது சமூகப் பரவலாக மாற்றமடையவில்லை என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பொய்யுரைத்துள்ளார். இதனால் பல தரப்பினரும் கடும் சீற்றமடைந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலுக்குக் காரணம் என்ன என்பதை வெளிப்படுத்துமாறு நாடாளுமன்றத்தில் எதிரணியினர் கேள்வி எழுப்பியிருந்த போதிலும் அதற்கும் பதிலளிக்காமல் சுகாதார அமைச்சர் மௌனம் காத்துள்ளார்.

இதனிடையே சமூகத்துக்குள் ஊடுருவியுள்ள கொரோனாவுக்கு விரைவில் முடிவுகட்டியே தீருவோம் என்று கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை கொத்தணி பரவலின் மூல காரணத்தை இன்னமும் கண்டறியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், கொரோனா வைரஸ் பரவல் தற்போது சமூகப் பரவலாக மாற்றமடையவில்லை என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் இராணுவத் தளபதியிடம் வினவியபோது, “அது அமைச்சரின் கருத்து; இது எனது கருத்து” என்று மட்டும் பதிலளித்துள்ளார்.

மேற்படி கேள்வி தொடர்பில் மேலதிக கருத்து எதையும் தெரிவிக்க இராணுவத் தளபதி விரும்பவில்லை.

Leave A Reply

Your email address will not be published.