குருநாகல் மாவட்டத்துக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநித்துவம் – ரிஸ்வி ஜவஹர்ஸா

இம்முறை குருநாகல் மாவட்டத்தில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான நல்லதொரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஏனென்றால் இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவில் இருந்து எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் நிறுத்தப்படவில்லை என்று குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஸா தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இம்மாவட்டத்திற்கு கிடைத்த ஓர் அரிய சந்தர்ப்பத்தை நிதானமாகச் சிந்தித்து கட்சி வேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒன்று பட்டு சிறுபான்மையின மக்களுடைய பிரதிநித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது மட்டுமல்ல மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபை, புத்திஜீவிகள் சிவில் அமைப்பினர்கள் என அதிகம் கவனம் செலுத்தி குருநாகல் மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பு எல்லோருக்கும் இருக்கிறது.

இத்தேர்தலைப் பொறுத்த வரையில் வேறு கட்சிகள் மீது கவனம் செலுத்துவது பொருத்தப்படாக அமையாது என்கின்ற எண்ணக்கருக்களையும் நுட்பங்களையும் மக்கள் விளங்கி அதன் உண்மைத் தன்மையை அறிவு ரீதியாக சிந்தித்து முஸ்லிம் மக்கள் வாக்களித்தால் நிச்சயம் என்னுடைய வெற்றியும் முஸ்லிம்கள் நீண்ட நாட்களாக இம்மாவட்டத்தில் எதிர்பார்க்கின்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தேவை என்கிற விடயமும் உறுதியானதாக அமையும். உண்மையிலேயே இத்தேர்தலை முஸ்லிம்கள் புதிய மாற்றத்திற்கான தேர்தலாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

என்னுடைய 16 வருட மாகாண சபை அரசியல் அனுபவத்தில் குருநாகல் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பாதைகளிலும் ஒவ்வொரு முஸ்லிம் பாடசாலைகளிலும் ஒவ்வொரு பள்ளிகளிலும் பொது இடங்களிலும் என் கால்கள் கைகள் பாடாத இடங்கள் இல்லை. என்னால் இயன்றதை இம்மாவட்ட மக்கள் நலன் சார்ந்த பங்களிப்புக்களையும் நல்லாதரவினையும் வழங்கியுள்ளேன். இம்மாவட்ட மக்கள் நன்கறிவார்கள். குறிப்பாக ஒரு மாகாண சபை உறுப்பினராக இருந்து நான் நீண்ட காலம் ஆற்றிய சேவைகள் அளப்பரியவை. அதற்கு இம்மாவட்ட மக்கள் நிச்சயமாக நன்றியுடையவராக இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
எல்லாவற்றை விட குருநாகல் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லை என்று பின்னர் யோசிக்காமல் முஸ்லிம்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தில் எல்லோரும் ஒன்று பட்டு புத்திசாதுரியத்துடன் சிந்தித்து செயற்பட வேண்டடியது எமது தார்மிகப் பொறுப்பாக இருந்து கொண்டிருக்கிறது. இதைத் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அவை மட்டுமல்ல எமது மாவட்ட முஸ்லிம்கள் மட்டுமல்ல சகோதர தமிழ், சிங்கள மக்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து ஏகமானதாக ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம்கள் பாராளுமன்றப் பிரதிநித்துவம் ஒன்றை இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியப்பாடுகள் நம் கண்முன் தெளிவாகப் புலப்படுகிறது. மாறாக வெற்றி இலக்கை அடைந்து கொள்ள முடியாத சாத்தியப்படாத வேட்பாளருக்கு இம்முறை இத்தேர்தலில் எமது வாக்குகளைப் பிரயோகிப்பதில் எந்தவிதமான அர்த்தமும் கிடையாது.

குறிப்பாக ரணில் தலைமையில் தொடர்ந்து தோல்வியுறும் கட்சியின் கப்பலில் ஏறாமல் ஜனாதிபதித் தேர்தலின் போது நூற்றுக்கு தொன்னூறு விகிதம் இம்மாவட்ட முஸ்லிம் மக்கள் நேசித்து வாக்களித்த சஜித் பிரேமதாசவின் கட்சியில் போட்டியிடவே நான் முன் வந்துள்ளேன். இம்மாவட்டத்தில் உறுதி செய்யப்பட்ட வெற்றி இலக்கை உத்தரவாதப்படுத்துவதற்கு உங்கள் பொன்னான பெறுமதிமிக்க வாக்குகளை வழங்கி என்னை வெற்றி பெறச் செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்

Comments are closed.