நான்கு வயது சிறுமியை நெருப்புக் கொள்ளியால் சுட்ட பெண் கைது.!
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோய்னோன் தோட்டத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி நெருப்புக் கொள்ளியால் சுடப்பட்டதை அடுத்து, 55 வயதுடைய பெண் ஒருவரை (03.12)வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் பதில் நீதவான் கே.விநாயகமூர்த்தி உத்தரவிட்டார். .
நெருப்பால் சுடப்பட்ட சிறுமியையும் (4), அவளது மூத்த சகோதரியையும் (14), ( 03.12) வரை ஹட்டன் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்குமாறும், இரண்டு சிறுமிகளையும் (03.12) மீண்டும் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் பதில் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தீக்காயங்களுக்கு இலக்கான சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிவதாகவும், சிறுமியின் தந்தை தாயை பிரிந்து மறுமணம் செய்து அதே தோட்டத்தில் வசித்து வருவதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாய் வெளிநாடு சென்றிருந்த போது நெருப்பினால் சுடப்பட்ட சிறுமியும், 14 வயது ஆன அவளது மூத்த சகோதரியும் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும், பாட்டி இறந்து சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு இரண்டு சிறுமிகளையும் அயலில் இருந்த ஒரு பெண் கவனித்து வந்ததாக பொகவந்தலாவ பொலிஸ் நிலையபொலிஸ் பரிசோதகர் நுவான் மதுசங்க தெரிவித்தார்.
மூத்த மகள் வெளிநாட்டில் வாழும் , தாயாருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, தம்மை கவனிக்கும் பெண் , அவரையும் , சகோதரியையும் சித்திரவதை செய்து தனது சகோதரியை நெருப்பினால் சுட்டதைக் கூறியதை அடுத்து, தாய் பொகவந்தலாவ சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தகவல் கொடுத்த பின்னர் பொலிசார், இரண்டு சிறுமிகளையும் பொலிஸ் காவலில் எடுத்ததோடு, சில நாட்கள் அவர்களை திக் ஓயா ஆரம்ப மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த பின் 30 ம் திகதி ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜராக்கினர்.