பிரான்சில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிம்மதியாக தூங்க முடியாது! : பிரான்ஸ் அதிபர் மெக்ரான்

ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்சில் நிம்மதியாக தூங்க மாட்டார்கள். பயம் பக்கங்களை மாற்றிவிடும் என பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ஆவேசமாக தெரிவித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வந்த சாமுவேல் பட்டி (வயது 47) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளிக்கு அருகே தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். ஆசிரியரை கொலை செய்த 18 வயது வாலிபரை காவல் துறை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்றனர்.

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளே இதற்கு காரணம் என்றும் அந்த நாட்டின் அதிபர் மெக்ரான் தெரிவித்தார். இந்த கொலை தொடர்பாக கொலையாளியின் குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் உள்பட 11 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே படுகொலை செய்யப்பட்ட ஆசிரியருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பிரான்சில் உள்ள முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி பேரணியாக சென்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிபர் மெக்ரான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்தினார். இதில் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பவர்களை கண்டறிந்து களையெடுப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தின் முடிவில் பேசிய அதிபர் மெக்ரான் “ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்சில் நிம்மதியாக தூங்க மாட்டார்கள். பயம் பக்கங்களை மாற்றிவிடும்” என ஆவேசமாக தெரிவித்தார்.
இதேவேளை இணையம் மற்றும் சமூகவலைத் தளங்கள் மீதான கண்காணிப்பை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த ஞாயிறு முதல் எண்பதுக்கு மேற்பட்ட சமூகவலைத்தளப் பதிவுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

பகிரங்கப் படுகொலையைப் புரிந்த தாக்குதலாளியை ஆதரிக்கும் விதத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணையத்திலும் முகநூல், வட்ஸ்அப் போன்ற சமூகவலைத் தளங்களிலும் இடப்பட்ட காணொளிகள் மற்றும் வெறுக்கத்தக்க உரைகள் தொடர்பாகவே விசாரணைகள் நடைபெறுகின்றன என்று உள்துறை அமைச்சு தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் தனிநபர்களை இலக்கு வைத்து நாடெங்கும் தேடுதல்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
காவல்துறை கண்காணிப்புப் பட்டியலில் உள்ள டசின் கணக்கிலான தனிநபர்களைத் தேடிப் பிடிக்கும் நோக்கில் விசேட காவல் துறை குழுக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்று உள்துறை அமைச்சர் ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கிறார்.

கடும் போக்கு இஸ்லாமிய அமைப்புகளையும் அவற்றின் வலைப் பின்னல்களையும் செயலிழக்கச் செய்யும் நோக்குடன் இந் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக தீவிரவாதம் தூண்டப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் அரசு அமைச்சர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை சமூக வலைத்தள நிறுவனங்களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

யூடியூப் , முகநூல்.ருவீற்றர் , ரிக்ரொக், சினப் சற் ஆகிய சமூகவலைத் தளங்களின் பிரான்ஸ{க்கான நிறைவேற்று அதிகாரிகளையே குடியுரிமை விவகாரங்களுக்கான இணை அமைச்சர் Marlène Schiappa சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதுள்ள சட்டங்களின்படி ஒரு பயங்கரவாதச் செயலை ஆதரிப்பது, மன்னிப்பது, ஏற்றுக்கொள்வது போன்ற குற்றங்கள் பொது இடம் ஒன்றில் புரியப்பட்டால் 5ஆண்டுகள் வரையான சிறையும் 75 ஆயிரம் ஈரோக்கள் அபராதமும் விதிக்கப்படலாம். இக்குற்றங்கள் இணையம் (ஐவெநசநெவ) வழியாகப் புரியப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் ஈரோக்கள் வரை அபராதமும் தீர்ப்பளிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பெற்றார் ஒருவரால் முகநூலில் பகிரப்பட்ட காணொளி உரைகளே வகுப்பறைக்குள் பேசித் தீர்த்திருக்கக் கூடிய விவகாரத்தை பொது வெளியில் அம்பலப்படுத்தி இறுதியில் ஆசிரியரது படுகொலைக்கு வழிவகுத்து விட்டன என்றவாறான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

காணொளிகளை வெளியிட்ட தந்தை ஏற்கனவே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆசிரியரது தலையை வெட்டிக்கொன்ற தாக்குதலாளி அவரோடு சமூகவலைத்தளத்தில் தொடர்பு கொண்டமையும் தெரியவந்திருக்கிறது.

தாக்குதலாளியான இளைஞர் ஆசிரியரைக் கொன்ற பின்னர் அவரது படத்தை ரூவீற்றரில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவு உடனடியாக நிர்வாகத்தால் நீக்கப்பட்டது.

ஆசிரியரது படுகொலை தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட 11பேருடன் மேலும் 4 கல்லூரி மாணவர்களும் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.