18. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்

அந்தப் பெண்மணி உடனடியாக கொட்டியா கொட்டியா என்று கத்த தொடங்கி விட்டாள். நான் நடுங்கி விட்டேன். அப்பொழுது அங்கு இருந்த J.R ஜெயவர்தனவிக்கு பாதுகாப்பாக வந்த ஆறேழு போலீஸ் பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிவந்து என்னை பிடித்து அடிக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள எப்படித்தான் அந்த வேகம் வந்ததோ தெரியாது எல்லோரையும் தள்ளிவிட்டு கதவை திறந்துவிட்டு வாசலுக்கு ஓடினேன்…..

பகுதி 18

1983 ஆண்டுநவம்பர் 23ஆம் தேதி காலை 11 மணி போல், இந்தியஅரசு கொடுத்த காரில் சாவகச்சேரி எம் பி நவரட்ணம் அவர்களும் , யாழ்ப்பான எம் பி யோகேஸ்வரன் அவர்களும் நான் இருந்த நோர்த் அவென்யூ L. கணேசன் எம்பி வீட்டுக்கு வந்து என்னை கூட்டிக்கொண்டு போனார்கள்.

மூவரும் சிரித்துப் பேசிக்கொண்டு சந்தோசமாக எல்லா வெளிநாட்டு தூதுவரலயங்களுக்கும் இலங்கை பிரச்சனை தொடர்பான புத்தகங்களை கொடுத்தோம். அப்படி போய் வரவேற்பறையில் கொடுக்கும் போது என்னோடு நவரத்னம் எம்பி அல்லது யோகேஸ்வரனின் வந்து தாங்கள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று கூறி புத்தகங்கள் கொடுக்க உதவி செய்வார்கள்.

பல இடங்களில் இவர்கள் வந்தது எனக்கு உதவியாக இருந்தது. நாங்க திரும்ப தமிழ்நாடு இல்லத்திற்கு வரும்போது கிட்டத்தட்ட பகல் ஒன்றரை மணி இருக்கும். அவர்களுடன் அங்கேயே சாப்பிட்டுவிட்டு நான் கிளம்பும்போது, அவர்கள்இருவரும் என்னிடம் முக்கியமான இடத்துக்கு கொடுக்கவில்லை என்றார்கள். எல்லா இடத்துக்கும் கொடுத்து விட்டேனே என்று கூற அவர்கள் இல்லை இலங்கை ஹைகமிஷனுக்கு கொடுக்கவில்லை என்றார்கள்.

நான் வேண்டாம் அண்ணா பிரச்சினையாகிவிடும் என்று கூறினேன். என்னை தனியாக போய் கொடுக்கச் சொன்னார்கள். தாங்கள் வந்தால் தான் பிரச்சனை என்றும், ஜே ஆர் ஜெயவர்தனா தனக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்று தெரியவரும் என்று என்னை உசுப்பேத்தி விட்டார்கள். நானும் சரி என்றேன்.

விதி விளையாடுகிறது என்று அப்போது தெரியவில்லை தமிழ்நாடு இல்லத்தில் இருந்து இலங்கை தூதுவராலயம் பத்து நிமிட நடை தூரத்தில் தான் இருந்தது.

நான் அப்படியே வீட்டுக்கு போவதாக கூறிவிட்டு , என்னிடம் மிச்சமிருந்த 4 புத்தக கவர்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பினேன். அங்கு எங்களை கண்காணித்துக் கொண்டிருந்த IB அதிகாரி என்னோடு கதைத்துக் கொண்டு வந்தார்.என்னிடம் இருந்த புத்தகங்களை எல்லாம் பார்த்துவிட்டு, இந்த நேரம் நீங்கள் இலங்கை எம்பசிக்கு போய் கொடுப்பது நல்லதல்ல, நீங்கள் தபால் மூலம் அனுப்புங்கள் என்று அறிவுரை கூறினார். விதி யாரை விட்டது.பிரச்சினை ஒன்றும் வராது ரிஷப்ஷனில் கொடுத்துவிட்டு வந்து விடுவேன் என்று கூறினேன். அவர் தனக்கும் ஒரு செட் புத்தகங்கள் கேட்க அவரிடம் இரண்டு செட் புத்தகங்களை கொடுத்தேன்.

இலங்கை எம்பசிக்கு 50 மீட்டர் முன்னாலேயே அவர் நின்றுவிட்டார். நான் உடன் திரும்பி வரும்வரை தான் காத்திருப்பதாகச் சொன்னார். அன்று அந்த அதிகாரி காத்திருந்த படியால்தான், இன்று நான் உயிரோடு இருக்கிறேன் என நினைக்கிறேன்.

எம்பஸி வாசலில் வெளி கேட்டில் நின்ற பாதுகாவலரிடம் புத்தகங்களை ரிஷப்சனில் கொடுக்க வேண்டும் என்று கூறினேன், அவர் போன் செய்து ரிசப்ஷனில் கேட்டுவிட்டு என்னை உள்ளுக்குள் அனுப்பினார். வாசலுக்கும் ரிசப்ஷனுக்கும் ஒரு முப்பது மீட்டர் இடைவெளி இருக்கும். ரிசப்ஷனில் இரண்டு ஒட்டிய புத்தகக் கவர்கள்களையும் கொடுத்தபோது, ரிசப்சனில் இருந்த பெண்மணி இந்தக் கவர்களில் என்ன இருக்கிறது என கேட்க புத்தகங்கள் என கூறினேன். யார் கொடுத்தது என கேக்க நான்பதில் கூற தடுமாறியது,அவருக்கு சந்தேகத்தை கொடுத்தது. உடன் கவரைப் பிரித்துப் பார்க்க உள்ளே இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான படங்களுடன் கூடிய பிளாட் இயக்க பெயருடன் கூடிய புத்தகங்கள்.

அந்தப் பெண்மணி உடனடியாக கொட்டியா கொட்டியா என்று கத்த தொடங்கி விட்டாள். நான் நடுங்கி விட்டேன். அப்பொழுது அங்கு இருந்த J.R ஜெயவர்தனவிக்கு பாதுகாப்பாக வந்த ஆறேழு போலீஸ் பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிவந்து என்னை பிடித்து அடிக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த நேரத்தில் என் உயிரை காப்பாற்றிக் கொள்ள எப்படித்தான் அந்த வேகம் வந்ததோ தெரியாது எல்லோரையும் தள்ளிவிட்டு கதவை திறந்துவிட்டு வாசலுக்கு ஓடினேன். எனக்குப் பின்னால் அங்கு வேலை செய்த கிட்டத்தட்ட ஒரு பத்து பதினைந்து பேர் ஓடி வர தொடங்கினார்கள் வெளிகேட்டில் பாதுகாப்புக்காக நின்ற அலுவலர் என்னை கட்டிப்பிடிக்க அவரை தள்ளிவிட்டு , எம்பஸ்ஸியை விட்டு ரோட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.

சாணக்கியபுரி என்ற மிகப் பாதுகாப்பான இடத்தில் தெருவில் ஓடிக்கொண்டிருந்தேன். பின்னால் துரத்துகிறார்கள். நான் வெடிகுண்டு வீசிவிட்டு ஓடுவதாக கத்துகிறார்கள். அப்பொழுது அங்கு மாநாட்டுக்காக பாதுகாப்புக்காக நின்ற போலீஸ்காரர்கள் தங்களது துப்பாக்கியை என்னை நோக்கி திருப்பி, அவர்கள் துப்பாக்கியை லோடு செய்யும் சத்தம் கேட்டது. நான் அவர்களுக்குப் பக்கத்தில் போய் கையை தூக்கிக்கொண்டு முழங்காலில் இருந்து சரணடைந்தேன்.

என்னை துரத்திக் கொண்டு வந்தவர்கள் நான் கைக்குண்டு வீசிவிட்டு ஓடுவதாக சொல்லி நான் சரணடைந்த போலீசாரிடம் கூறிவிட்டு என்னை அடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டு போனார்கள்.

எம்பஸ்ஸி உள்ளுக்குள் வைத்து அடித்து அடித்து விசாரிக்கத் தொடங்கினார்கள். அதே நேரம் வெளியில் எனக்காக காத்திருந்த IB அதிகாரி நிலைமையை உணர்ந்ததோடு மட்டுமில்லாமல், அவருக்கு நான் கையில் வெடிகுண்டு எதுவும் வைத்திருக்கவில்லை என்ற உண்மையும் தெரியும். அவர் உடனடியாக தமிழ்நாடு இல்லம் போய் யோகேஸ்வரன், நவரட்ணம் ஆகியோருடன் விபரத்தைக் கூறி அமிர்தலிங்கத்திடம் நடந்த விபரத்தைக் கூறி விட்டு, தனது உள்துறை அமைச்சகம் போய் அவர்களது IB உயர் அதிகாரிகளிடமும் முழு விபரமும் கூறியுள்ளார்.

அமிர்தலிங்கம் ஜிபார்த்தசாரதியிடம் உடனடியாக இந்த தகவலை கூறியுள்ளார். IB மூலம் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என்று இந்திரா காந்தியின் செயலாளர் அலெக்சாண்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம் இந்த மாநாட்டின் முதல் நாளிலே இப்படி ஒரு பாதுகாப்பு குறைபாடு அசம்பாவிதம் நடந்து விட்டது என்று.

உடனடியாக அந்த ஏரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சவுத் அவென்யூ பொலிஸ் நிலையத்திலிருந்து எம்பஸ்சி வந்து விசாரித்தார். அப்பொழுது இருந்த நடைமுறை எம்பஸ்ஸி இருக்கும் எம்பஸி ஏரியாவில் யாரையாவது பிடித்தால் இலங்கைக்கு கொண்டு போகலாம். இந்திய சட்டம் அதை தடுக்காது. அவர்கள் என்னை இலங்கை கொண்டு போக ஆயத்தங்கள் செய்து வீடியோக்கள் போட்டோக்கள் எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். போலீஸ் அதிகாரி என்னிடம் ரகசியமாக உன்னை இலங்கைக்கு கொண்டு போகப் போகிறார்கள் பாக்கெட்டில் ரகசிய போன் நம்பர்கள் எதுவும் இருந்தால் தன்னிடம் கொடுத்துவிடும் படி நானும் கண்ணை காட்ட,என்ன செக் பண்ணுவது போல் எனது பேர்ஸ் மற்றும் சில முக்கிய பொருட்களை அவர் எடுத்து ஒளித்து வைத்து விட்டார்.

திடீரென பாதுகாப்பு படைகள் புடைசூழ உயரதிகாரி உள்ளே வந்தார்,அங்கிருந்த இந்திய போலீஸ் அதிகாரிகள் அவருக்கு சல்யூட் அடித்து மரியாதை செய்தார்கள். அவர் அங்கிருந்த இலங்கை அதிகாரிகளிடம் தான் , இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு படையின் சீப் செக்யூரிட்டி அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். என்ன நடந்தது என விசாரித்தார் அவரிடம் அவர்கள் வெடிகுண்டு கதையைச் சொல்லவில்லை. புத்தகங்கள் கொடுத்ததாக கூறினார்கள்.

அதற்காக ஏன் இவரை அடித்தீர்கள்? ஏன் கைது செய்தீர்கள்? என அவர்களிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டார். அவர்கள் இவர் புலிப் பயங்கரவாதி விரைவில் இலங்கை கொண்டு போக போகிறோம் என கூறினார்கள். அப்போது அவர் இவரை எங்கே பிடித்தீர்கள் என கேக்க, அவர்கள் எம்பசியில் உள்ளே என்றார்கள், அந்த அதிகாரி நான் விசாரித்து விட்டுத்தான் வருகிறேன்.

ரோட்டில் இந்தியன் போலீசார் தான் இவர் சரணடைய வைத்து கைது செய்ததாக தகவல் இருக்கிறது என்று கூறிவிட்டு என்னை ரோட்டில் கைது செய்த போலீஸ்காரர்களை வரவழைத்து அவர்களுக்கு முன் விசாரித்துவிட்டு, அங்கு இருந்த அந்த ஏரியா போலீஸ் அதிகாரியை கூப்பிட்டு சத்தம் போட்டார்.

என்னை கைது செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போயிருக்க வேண்டும் என்றும், அதோடு என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போய் FIR போட்டு விசாரிக்கும்படியும் சொல்லி, என்னை இன்ஸ்பெக்டர் கூட்டிப் போகும் வரை, அந்த அதிகாரி தனது படையினருடன் அங்கிருந்தார். அவருடன் இலங்கை அதிகாரிகள் கடும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் அவர் அதை பொருட்படுத்தவில்லை.

என்னை கைது செய்த சவுத் அவென்யூ போலீஸ் அதிகாரி தனது அலுவலகம் போய் என்னை கதிரையில் இருக்கச் சொல்லி என் மேசையில் அடித்த காயங்களுக்கு மருந்து தடவ சொல்லி மருந்து கொடுத்தார். நல்ல ஒரு ஏலக்காய்-டீயும் வாங்கிக் கொடுத்தசிரித்து சிரித்து எல்லா விபரங்களையும் கேட்டு பதிவு செய்து கொண்டார்.

நான் கொடுத்த புத்தகங்களின் ஒரு கவரை எடுத்து வந்திருந்தார். அதை பிரித்துப் பார்த்து இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டவர்களின் படங்களை எல்லாம் பார்த்து ரொம்ப கவலைப் பட்டார். நான் பிடிபட்ட நேரம் பகல் ரெண்டு மணி இருக்கும். போலீஸ் நிலையம் கொண்டு வந்த நேரம் மாலை ஆறு மணி இருக்கும்.

இரவு 8 மணி போல் டெல்லி போலீஸ் கமிஷனர் வந்தார். எனது வாக்குமூலம் எல்லாம் பார்த்தார். எம்பஸிகாரர் கொடுத்த வாக்கு மூலத்தையும் கொண்டு வந்த போது அதில் புத்தகம் கொடுத்ததாக மட்டும் இருந்தது. போலீஸ் கமிஷனர் இது பாரதூரமான குற்றம் ஒன்றுமில்லை என்னை தேவையான விபரங்களை எடுத்துவிட்டு என்னை விடுதலை செய்யும்படி கூறினார்.

ஆனால் வெளியில் நின்ற இலங்கை இலங்கை அதிகாரிகள் உடனடியாக இலங்கை எம்பசிக்கு அறிவித்திருக்கிறார்கள் போல, இலங்கை எம்பசி முதன்மைச் செயலாளர் வந்து, டெல்லி போலீஸ் கமிஷனரிடம் இலங்கை ஜனாதிபதி JR ஜெயவர்தனா மாநாட்டுக்காக டெல்லியில் நிற்பதால் அவருக்கு என்னால் உயிர் ஆபத்து இருப்பதாக எழுத்து மூலம் புகார் கொடுத்தார்கள்.

போலீஸ் கமிஷனரும் என்னிடம் வந்து என்னை கைது செய்ததற்கு உண்மையான ஒரு ஆதாரமும் இல்லை என்றும், ஆனால் அவர்கள் புகார் கொடுத்திருந்தால் எம்பஸ்ஸி என்ற படியால் அதை அலட்சியப்படுத்த முடியாது. அதனால் என்னை கைது செய்து மாநாடு முடியும் வரை சிறையில் வைப்பதாக கூறி விட்டு போய்விட்டார்.காவல் நிலைய அதிகாரி அன்றிரவு நான் அங்கு படுப்பதற்கு ஒழுங்குகள் செய்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து நான் ஓடிவிடாமல் இருக்க துப்பாக்கி காவலர்களையும் வைத்துவிட்டார்.

தொடரும் ….


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.