நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு கொரோனாவா?

நாடாளுமன்றத்தில் உள்ள சில உறுப்பினர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்று சபையில் இன்று கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா நெருக்கடி குறித்து கருத்து வெளியிட்ட எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கருத்து தெரிவித்தார்.

அதாவது, யால பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சஜித் பிரேமதாஸ சென்றிருந்தார் என்றும், அங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் சஜித்துக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு அமைய சுகாதார அமைச்சு, அவரை இரண்டாம்நிலை தொற்றாளராக அடையாளப்படுத்தியிருக்கின்றது எனக் கூறினார்.

இதேவேளை, சபையில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, இன்று காலை பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களிலும் அமைச்சர் பந்துல குணவர்தன பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொண்டதை சபையில் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து சபையில் பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்தன, வர்த்தக அமைச்சில் நடந்த சந்திப்பு ஒன்றுக்கு வருகை தந்திருந்த வர்த்தக பிரதிநிதி ஒருவருக்கு தொற்று உறுதியாகியிருப்பதால் தானும் தனிமையிலிருந்து பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொண்டதை ஏற்றுக்கொண்டதுடன், தனக்குக் கொரோனா தொற்று இல்லை என்பது அறிக்கையில் உறுதியாகியிருக்கின்றது என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, தனது ஊராகிய மத்துகமவில் சில பிரதேசங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அங்குள்ள கொரோனா நோயாளர் அமைச்சர் காமினி லொக்குகேயின் நெருங்கிய உறவினர் என்ற தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம வெளியிட்டார்.

ஆகவே, அமைச்சருக்கும் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் சபையில் இன்று முன்வைத்தார்.

அதேபோல், இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகத்தையும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சபையில் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.