19. இந்திய தொடர்புகளும் , இயக்கங்களின் இந்திய அனுபவங்களும் : வெற்றிச் செல்வன்

பகுதி 19

நான் போலீஸ் நிலையத்தில் இருக்கும் போது, நான் தங்கியிருந்த எல் கணேசன் எம் பி யின் வீட்டுக்கு இன்ஸ்பெக்டர் போண் பண்ணி எனது டெல்லி நண்பர் சித்தார்த்தனிடம் நான் கைது செய்யப்பட்ட விபரத்தை கூறி என்னையும் பேசச் சொன்னார்.

நானும் ஒரு பிரச்சினையும் இல்லை யோசிக்க வேண்டாம் என கூறினேன். சித்தார்த்தன் தான்அடுத்த நாள் காலையில் வந்து பார்ப்பதாக சொன்னார். இரவு முழுக்க தூங்க முடியாத படி சரியான குளிர், யோசனை. காலையில் 5 மணிக்கு சுடச்சுட டீ கொடுத்தார்கள்.

காலை7:00மணிபோல் டெல்லி நண்பர்கள் சித்தார்த்தன், சம்பத், பேங்க் வெற்றிச்செல்வன் அவர்களுடன் கூட ஒருத்தரும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள்.

கூட வந்திருந்தவர் அண்ணா திமுகவை சேர்ந்த கோபிசெட்டிபாளையம் பாராளுமன்ற உறுப்பினர் திரு சின்னசாமி . அவர் வக்கீலும் கூட. அந்த மாநாடு நடக்கும் நேரத்தில் பார்லிமென்ட் இல்லாததால் எங்களுக்கு வேண்டியவர்களான  எல் கணேசன் , வைகோ , கல்யாணசுந்தரம் போன்ற எம்பிக்கள் ஆகியோர்  ஊருக்குப் போய் இருந்தார்கள்.

அண்ணா திமுக வின் முதல் எம்பி மாயத்தேவர் இவர் பின்பு திமுகவுக்கு மாறிவிட்டார். இவர் டெல்லியில் இருந்தபடியால் இவரிடம் போய் சித்தார்த்தனும் நண்பர்களும் விஷயத்தை சொல்லி போலீஸ் நிலையம் வரச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் தனக்கு ஏர்போர்ட், பாராளுமன்றம், தனது எம்பி குவாட்டர்ஸ் இம்மூன்றும் தான் தெரியும் என்று கூறி வர மறுத்து விட்டாராம். முன்பு முதன்முறை எல் கணேசன் எம்பியுடன் டெல்லி வந்தபோது திமுக பாராளுமன்ற அறையில் இவரை சந்தித்திருக்கிறேன்.  அப்பொழுது அவர் என்னிடம் இலங்கையில் ஒரு 10 ஆயிரம் தமிழர்கள் இருப்பார்களா என கேட்டார்.

நான் இல்லை 35 லட்சம் தமிழர்கள் இருப்பதாக கூறினேன். அவர் இந்தியாவிலிருந்து போனவர்கள் தானே என்றார். நான் இல்லை என்று கூறி அங்கு நடக்கிற  பிரச்சினைகள் கொலைகளைப் பற்றி விபரமாக கூறினேன். எல்லாத்தையும் கேட்டுட்டு கடைசியாக ஒரு வார்த்தை சொன்னார். அப்ப நாங்க பப்ளிக் மீட்டிங்ல தமிழனை கொல்கிறான் ,வெட்டுகிரான் என்று பேசுவதெல்லாம் உண்மைதான் போல என்று கூற, பக்கத்தில் இருந்த மற்ற எம்பி கள் பேசாமா சும்மா இருங்க என்று கூறிஅவரை தடுத்து விட்டார்கள்.

கழுத்தில் ஒரு கர்ச்சீப் போட்டு இருப்பார். கால் சட்டைப் பையில் விஸ்கி பாட்டில் இருக்கும் நடந்து போகும்போது பெரிய மரங்களுக்குப் பின்னால் நின்று குடித்துவிட்டு தான் போவார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கின் விபரத்தை அவர்களிடம் விலக்கிவிட்டு மாநாடு முடியத்தான் ஜாமீன்எடுக்கலாம் என்று கூறினார். அவர்களும் எனக்கு டீயும், காலைச் சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு போனார்கள். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டுக்கு கொண்டு போவதற்கு வாகனத்தை எதிர்பார்த்திருந்தார்கள். மாநாட்டு பாதுகாப்புக்காக வாகனங்கள் போனதால் வாகனம் கிடைக்கவில்லை. உடனே எனது, கையிலும் காலிலும் சங்கிலி வைத்துப் பூட்டி ஒரு போலீஸ்காரர் தனது கையில் சங்கிலியைப் போட்டுக் கொண்டார்.

துப்பாக்கி ஏந்திய நாலு போலீஸ்காரர் பாதுகாப்பில் நடந்து போய் கோர்ட்டுக்கு பஸ்ஸில் போனோம். எல்லா மக்களும் எனது கோலத்தை பெரும் பயங்கரவாதி போல என்று பயத்துடன் பார்த்தார்கள். எனது வழக்குபின்னேரம் 3 மணிக்கு நடந்தது . 15 நாள் ரிமாண்ட் பண்ணி விட்டார்கள். பகல் உணவு ரெண்டு சப்பாத்தி. இரவு சாப்பாட்டுக்கு நான்கு சப்பாத்தி கிழங்கு கறி பார்சல் கட்டி தந்தார்கள். மாலை ஆறு மணி போல் வரிசையாக ஐந்துக்கு மேற்பட்ட பெரிய பஸ்களில் நான் உட்பட எல்லா குற்றவாளிகளையும் ஏற்றிக்கொண்டு, ஆசியாவின் மிகப் பெரிய சிறைச்சாலை திகார் ஜெயிலுக்கு கொண்டு போனார்கள்,

போவதற்கு இரவு எட்டு மணியாகிவிட்டது . புதிதாகவந்தவர்களை டாக்டர் செக் பண்ணி, அதன் பின்பு போர்த்திக் கொள்ள ஒரு நாத்தம் புடிச்ச ஒரு கம்பளி போர்வையும் கொடுத்து வெளிநாட்டு கைதிகள் தங்கியுள்ள சிறையில் என்னை அடைத்தார்கள்.

.அன்றைய தேதி 24/11/1983. நான் அடைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினர் சிறையில் இலங்கை கொழும்பு தமிழர், சிங்களவர், பல வெளிநாட்டவர் உட்பட, அதில் முக்கியமானது ஆப்கான் புரட்சிப் படையை சேர்ந்தவர்கள். அவர்கள் அங்கு தனி ராஜ்ஜியமே நடத்திக் கொண்டிருந்தார்கள்.

அன்று காலை பத்திரிகைகளில் என்னை பற்றிய செய்திகள் வந்து இருந்தபடியால்,என்னை அந்த ஆப்கான் விடுதலை வீரர்கள் மரியாதையாக  நடத்தினார்கள். ஜெயிலர்கள் கூட அவர்களுக்குப் பயம். கிட்டத்தட்ட 10 பேர் இருந்தார்கள். அவர்கள் அங்கேயே சமைத்து சாப்பிடுவார்கள். தினசரி அவர்களுக்கு வெளியிலிருந்து இறைச்சி வரும். முதல் இரண்டு நாட்கள் எனக்கும் கொடுத்தார்கள். பின்பு நான் சிறை நிர்வாகம் கொடுக்கும் உணவு சாப்பிட்டேன். இந்த ஆப்கான் காரர்கள் வெள்ளைக்காரர்களை தான் தங்களது வேலைக்காரராக வைத்திருந்தார்கள். டாய்லெட்கழுவுவது. சமையல் எடுபுடி அவர்களுக்கு கை கால் பிடித்து விடுவது எல்லாம் வெள்ளைக்காரர்கள் தான்.

ஆப்கான்காரர்கள் தாங்கள் சாப்பிட்டு மிச்சம் இருக்கும் இறைச்சிகளை அவர்களுக்கு கொடுப்பார்கள். எமது சிறைக்குள்ளேயே சிகரெட், அபின் போன்ற பொருட்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கும். நான் சிறையில் இருக்கும்போது V.N நவரட்ணம், யோகேஸ்வரன் ஆகியோர் இரண்டு தரம் வந்து என்னை பார்த்தார்கள். நவரட்ணம் யோகேஸ்வரன் தங்களது இலங்கைஎம்பி என்ற விசிட்டிங் கார்டை கொடுத்து சீப் ஜெயில்லரிடம் நன்றாக பேசி விட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் போகும்போது நவரட்ணம் எம் பி தனது மூக்கு கண்ணாடியை அங்கு மறந்து விட்டுப் போயிருக்கிறார்.

பின்பு அதைப் பார்த்த ஜெயிலர் இலங்கை எம்பசிக்கு போன் செய்து  இப்படி இலங்கை எம்பிகள் இங்கு வந்தார்கள்.  போகும்போது கண்ணாடியை மறந்து விட்டு விட்டு போயிருக்கார் அவர்களிடம் கூறும்படி கூறியிருக்கிறார். இவர்களின் பெயரை கேட்ட இலங்கை எம்பசிகாரர்கள் ஜெயிலர் இடம் அப்படி யாரும் எம்பி இல்லை. அவர்கள் உங்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று கூறி போனை வைத்து விட்டார்களாம். அடுத்த முறை அவர்கள் என்னை பார்க்க வரும்போது ஜெயிலர் முழு விபரங்களையும் விசாரித்திருக்கிறார். அவர்கள் இலங்கைப் பிரச்சினை பற்றிய விபரங்கள் தாங்கள் இந்திராகாந்தியின் விருந்தினராக டெல்லியில் தங்கியிருப்பது போன்ற விபரங்களை கூறியிருக்கிறார்கள்.

ஜெயில் அதிகாரி அவர்களே மிகச் சிறப்பாக கவனித்து தேனீர் எல்லாம் வாங்கிக் கொடுத்து வழி அனுப்பி இருக்கிறார். அவர்கள் என்னோடு பேசும் போதும் எனக்கும் ஒரு கதிரை ஏற்பாடு செய்து கொடுத்தார். பின்பு அடிக்கடி ரவுண்ட்ஸ் வரும்போது என்னை தனியாக கூப்பிட்டு சுகம் விசாரிப்பார்.

ஒரு வாரம் ஜெயிலில் இருந்தேன். முதல் இரண்டு நாட்கள் கஷ்டமாக இருந்தது. பழகிவிட்டது. மாநாடு முடிந்து JR ஜெயவர்தன இலங்கை போகும்வரை எனக்கு ஜாமீன் கிடைக்காது என தெரியும்.

29ஆம் தேதி மாநாடு முடிந்தாலும், ஜாமீன் கிடைக்க நாளாகும்  என நினைத்தேன்.

தொடரும்…….


அனைத்து பதிவுகளையும் படிக்க இங்கே அழுத்தவும்

Leave A Reply

Your email address will not be published.