தலைகீழாகக் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்த விமானம் (Video)

டெல்டா எயாலைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று கனடாவின் டொரோன்டோ நகர விமான நிலையத்தில் தரையிறங்கியபோது தலைகீழாகக் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியபோது வானிலை மோசமாக இருந்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
டொரோன்டோ நகரின் பியர்சன் விமான நிலையத்தில்(17.02)நிகழ்ந்த இச்சம்பவத்தில் 18 பேர் காயமுற்றனர்.
அவர்களில் ஒரு குழந்தை உட்பட மூவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
காயமடைந்த அனைவரும் உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் செயின்ட் பால் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து டொரோன்டோ சென்ற அந்த விமானத்தில் 80 பேர் பயணம் செய்தனர். அவர்களில் நால்வர் விமானச் சிப்பந்திகள் என்றும் 76 பேர் பயணிகள் என்றும் டெல்டா எயார்லைன்ஸ் நிறுவனம் கூறியது.
விபத்தைக் காட்டும் காணொளியில் விமான இறக்கை ஒன்று உடைந்து கிடப்பதைக் காணமுடிந்தது.
அதே விமானத்தில் பயணம் செய்த ஜான் நெல்சன் எனும் பயணி விபத்து குறித்த காணொளியை முகநூலில் பதிவிட்டுள்ளார்.
பின்னர், சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் விமானம் தரையிறங்குவதற்கு முன்பு இவ்விபத்து நிகழப்போகிறது என்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்றார் திரு ஜான் நெல்சன்.
“விமானம் தரையில் மோதி, பக்கவாட்டில் நின்று, பின்னர் தலைகீழாக கவிழ்ந்தது,” என அவர் மேலும் கூறினார்.
“என்னால் இருக்கை வாரை அவிழ்த்தபிறகு தரையில் நகரமுடிந்தது. ஆனால், சிலரால் அவ்வாறு நகர முடியவில்லை. அவர்கள் தொங்கிக் கொண்டிருந்தனர். அவர்கள் கீழே இறங்க உதவி தேவைப்பட்டது. சிலரால் தாங்களாகவே கீழே இறங்க முடிந்தது,” என்று அவர் தெரிவித்தார்.
இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்வதாகக் கனடிய அதிகாரிகள் கூறினர்.
கடந்த வாரயிறுதியில், பனிப்புயலால் 22 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனி விமான நிலையத்தில் படர்ந்திருந்ததைத் தொடர்ந்து, அதிக காற்றையும் குளிரான வெப்பநிலையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக பியர்சன் விமான நிலைய நிர்வாகம் (17.02) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.