பல மீன் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று.

ஹட்டனிலும் அண்மித்த பகுதிகளிலும் 5 மீன் வியாபாரிகளுக்கு கொரோனா!

ஹட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும், பழகியவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பேலியகொடை கொரோனா கொத்தணி ஊடாகவே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது எனவும், இவர்கள் சென்றுவந்த இடங்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பேலியகொடை மீன் சந்தைக்குசென்றுவந்தர்கள் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றனர், அந்தவகையில் மேற்படி ஐவரிடமும் கடந்த (23.10.2020) பீசீஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பீசீஆர் பரிசோதனை முடிவுகள் நேற்றிரவு (24.10.2020) வெளியான நிலையில், அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி பேலியகொடை மீன்சந்தைக்குசென்றுவந்து, ஹட்டன் நகரில் மீன் விற்பனையில் ஈடுபடும் நிலையமொன்றின் ஊழியருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து புதிய மற்றும் பழைய சந்தை கட்டடத் தொகுதிகள் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இவருடன் தொடர்பை பேணியவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், அவர்களிடமும் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், கினிகத்தேன, மில்லகாமுல்ல – சந்திரிகம பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரியொருவர் பேலியகொடவுக்குசென்று மீன் எடுத்துவந்து லக்‌ஷபான மற்றும் நோட்டன் பிரிட்ஜ் பகுதிகளிலுள்ள மீன் விற்பனை நிலையங்களுக்கு மீன் வழங்கியுள்ளார்.அவருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில் மேற்படி நகரங்களிலுள்ள மீன் விற்பனை நிலையங்களும் மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை மூடப்பட்டுள்ளன.

அதேபோல பேலியகொடை மீன்சந்தைக்குசென்றுவந்த கினிகத்தேன, பாலகடவல பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

பொகவந்தலாவ கொட்டியாகல பகுதியிலுள்ள மீன் வியாபாரியின் சாரதி ஒருவர், மீன் கொள்வனவுக்காக பேலியகொடை சென்றுவந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

அதேவேளை, பேலியகொடையிலிருந்து மஸ்கெலியா, பிரவுன்லோ பகுதிக்கு வருகைதந்த நபரொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட கங்கேவத்த பிரிவில் உள்ள 41 வயதுடைய நபர் ஒருவர் பேலியகொடை மீன் சந்தையில் தொழில் புரிகின்றார். இவர் கடந்த 17 ஆம் திகதி மஸ்கெலியா கங்கேவத்த பிரிவில் உள்ள அவரது இல்லத்துக்கு வருகை தந்துள்ளார்.

அவ்வாறு வரும்வழியில் மஸ்கெலியா நகரில் பல இடங்களுக்கு சென்றுள்ள அவர், மீண்டும் 19 ஆம் திகதி போலியகொடை சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரிடம் நேற்று முன்தினம் 23 பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.