“யார் இந்தப் பையன் ?” 300 ரூபாய் சம்பள அரங்கேற்ற நாயகன் : ஜோன் துரை

“யார் இந்தப் பையன் ?”
என்று கேட்டார் இயக்குனர் ஸ்ரீதர்.

“இவன் பெயர் கமலஹாசன்” என்று பதில் சொன்னார் அந்தப் பையனை ஸ்ரீதரிடம் அழைத்து வந்த ஜெமினி கணேசன். “களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமானவன். நடிப்புத் திறமை உள்ளவன். இவனுக்கு நீங்கள் இயக்கும் ஏதாவது ஒரு படத்தில் எப்படியாவது ஒரு வாய்ப்பு கொடுங்கள். அதற்காகத்தான் உங்களிடம் அழைத்து வந்திருக்கிறேன்.”

அது 1972ம் ஆண்டு.

ஸ்ரீதர் தன் அருகில் நின்ற கமலஹாசனை மேலும் கீழுமாக பார்த்தார்.

இளம் மீசை. இரண்டும் கெட்டான் வயது. ஏக்கமான பார்வையோடு ஸ்ரீதர் என்ன சொல்லப் போகிறார் என எதிர்பார்த்து காத்திருந்தார் கமலஹாசன்.

அவரை சிறிது நேரம் உற்று நோக்கிய பின் ஜெமினி கணேசனை நோக்கி திரும்பி இப்படிச் சொன்னார் ஸ்ரீதர்.

“ஸாரி. இவனுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்க முடியாது.”

“ஏன் ?”

“ஏனென்றால் இவனுக்கு சினிமாவுக்கு ஏற்ற முக அமைப்பு இல்லை.”

ஸ்ரீதர் இப்படி சொன்னவுடன் கமலஹாசனின் முகம் பரிதாபமாக மாறியது. கண்கள் இரண்டிலும் மெல்ல கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அருகில் நின்ற ஜெமினி கணேசன் கமலின் தோள்களில் தட்டிக் கொடுத்தார். “சரி. வாப்பா போகலாம்.”

கமல் தழுதழுத்த குரலில் ஜெமினியிடம் சொன்னார் :
“நான் வீட்டுக்கு போகிறேன். அப்படியே என் சொந்த ஊருக்கும் போய் விடுகிறேன்.”

புன்னகைத்தார் ஜெமினி. “ஏன் ? அதற்குள் நம்பிக்கை இழந்து விட்டாயா?”

கமல் நிமிர்ந்து ஜெமினியின் முகத்தை பார்த்தார். “உண்மையை சொல்லுங்கள். எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று இன்னமும் நீங்கள் நம்பி கொண்டிருக்கிறீர்களா ?”

“ஏன் இப்படிக் கேட்கிறாய் ?”

“இல்லை. எனக்கு பிறகு நடிக்க வந்த மாஸ்டர் ஸ்ரீதர், மாஸ்டர் சேகர், மாஸ்டர் பிரபாகர் எல்லோரும் சிவாஜியோடும் எம்ஜிஆரோடும் சேர்ந்து நடித்து, இப்போது தனியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஒருவன் மட்டும் இப்படி வாய்ப்புக்கள் கிடைக்காமல் ஏதாவது ஒரு படத்தில் பத்தோடு பதினொன்றாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியானால் நடிப்பதற்கு ஏற்ற திறமை என்னிடம் இல்லை என்றுதானே அர்த்தம் ?”

கமல் கேட்டது நியாயமான கேள்விதான். ஏனென்றால் 1972இல் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த குறத்தி மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்து வளர்ந்த மாஸ்டர் ஸ்ரீதருக்கு ஒரு முக்கியமான வேடம்.

மாஸ்டர் ஸ்ரீதர் நடிக்கும் அதே காட்சியில் ஒரு ஓரத்தில் நின்று ‘ராஜா வாழ்க’ என்று கூட்டத்தோடு கூட்டமாக சேர்ந்து கோஷம் போடும் ஒரு சாதாரண கேரக்டர் கமலஹாசனுக்கு.
அந்த விரக்தியில்தான் ஜெமினியை நோக்கி அப்படி ஒரு கேள்வியை கேட்டார் கமல்.
ஆனால் கமலின் இந்த கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாத ஜெமினி,
கமலை அழைத்துக் கொண்டு, காரை ஓட்டிக் கொண்டு நேராக போன இடம் இயக்குநர் கே பாலச்சந்தர் வீடு.

ஸ்ரீதரிடம் சொன்ன அதே வார்த்தைகளை அப்படியே பாலசந்தரிடமும் சொன்னார் ஜெமினி.

பாலச்சந்தர் கமலஹாசன் முகத்தை உற்றுப் பார்த்தார். படபடவென துடிக்கும் இதயத்தோடு பாலச்சந்தரின் பதிலுக்காக காத்திருந்தார் கமல்.

பதில் கிடைத்தது.

வாய்ப்பும் கிடைத்தது.

அரங்கேற்றம் படத்தில் கமலஹாசனுக்கு ஒரு சின்ன கேரக்டர் கொடுத்தார் பாலச்சந்தர்.  300 ரூபாய் சம்பளம்.

ஜெமினி கணேசன் கமலஹாசனை தன் அருகில் அழைத்தார். “300 ரூபாய்தானே தருகிறார்கள் என்று உன் முழு திறமையையும் காட்டாமல் விட்டு விடாதே. நீ யார் என்பதை நிரூபித்துக் காட்ட இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் ஒருபோதும் உனக்கு கிடைக்காது. நிச்சயம் நீ மிகப்பெரும் நடிகனாக வருவாய். மிகப் பெரும் புகழ் பெறுவாய்.
சரி. நான் போய் வருகிறேன்.”
இப்படிச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார் ஜெமினி.

அரங்கேற்றம் வெளிவந்தது. அடுத்தடுத்து வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வர ஆரம்பித்தன.
தொடர்ந்து தம் திறமைகளை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு வெகு விரைவிலேயே சினிமா உலகத்தின் அத்தனை சிகரங்களையும் தொட்டார்.

அனைத்து சிம்மாசனங்களிலும் அமர்ந்தார் கமல்.

அந்த நேரத்தில்தான் ஒரு படப்பிடிப்பு இடைவேளையில் ஒரு ஸ்டூடியோவில் தற்செயலாக ஜெமினி கணேசனை பார்த்தார்.

அருகில் ஓடினார். ஜெமினி கணேசன் சிரித்தபடி கேட்டார்:
“என்னப்பா கமல், எப்படி இருக்கிறாய் ?”

கமல் பிறந்தநாள்: 64 க்குள் 59 அதிசய ஆண்டுகள்… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonகமல் பதில் சொல்வதற்கு முன் சின்னஞ் சிறு புன்னகையோடு அடுத்த கேள்வியை கேட்டார் ஜெமினி. “ஆமாம். அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் ?”

யாரை குறிப்பிட்டு கேட்கிறார் என தெரியாமல் கமல் குழம்பிப் போய் நிற்க, சிரித்தபடி கேட்டார் ஜெமினி.

“கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சொன்னாயே. உன்னோடு அறிமுகமான மாஸ்டர் சேகர், பிரபாகர், ஸ்ரீதர் எல்லோரும் ஓஹோ என்று ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று.
இப்பொழுது கொஞ்சம் திரும்பி பார். நீ குறிப்பிட்ட அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பார்.”

ஜெமினி கணேசன் சொன்னது உண்மைதான். கமலைத் தவிர அவரோடு அறிமுகமான வேறு எந்த குழந்தை நட்சத்திரமும், இப்போது திரை உலகில் எந்த ஒரு இடத்திலும் இல்லவே இல்லை.
இதை சொல்லிக் காட்டி விட்டு புறப்பட்டு போய் விட்டார் ஜெமினி.

எதையும் எளிதாக புரிந்து கொள்ளும் கமலுக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை.
எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் கமலின் முன்னேற்றத்திற்காக எதற்காக ஜெமினி இவ்வளவு முயற்சிகளை எடுத்து இருக்க வேண்டும் ?

எவ்வளவு நேரம் சிந்தித்தும் இதற்கான பதில் எதுவும் தெரியவில்லை கமலுக்கு.
எனக்கும் கூட ஒரு சில விஷயங்களுக்கு பதில் தெரியவில்லை.

ஏனெனில் என் வாழ்க்கையிலும் கூட இதுபோல பிரதிபலன் எதிர்பாராமல் எத்தனையோ பேர் என்னிடம் எல்லையற்ற அன்பு காட்டியிருக்கிறார்கள்,
காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணமாக தாட்ஷா !
Dhatsha Dayaal

விஜய் டிவியின் ப்ரொடக்‌ஷன் ஹெட் பிரதீப் மில்ராய் பீட்டர் முதல் எத்தனையோ முக்கியமான நபர்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் தொழில் மேல் அக்கறை காட்டும் காஸ்ட்யூம் டிசைனர் தாட்ஷா (அண்ணாத்தே படத்துக்கு ரஜினியின் காஸ்ட்யூம் டிசைனர் இந்த தாட்ஷாதான்),

ரஜினியின் ‘அருணாச்சலம்’ திரைப்படத்திற்கான விளம்பர வாய்ப்பையும் இன்னும் ஏராளமான டாக்குமென்டரி திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பையும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி எனக்கு வாங்கி கொடுத்த என் நண்பர் ஜெயராஜ்,

அதுபோல என் வாழ்வில் இக்கட்டான தருணங்களில் நான் எதுவும் கேட்காமலே
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு கை கொடுத்து உதவி செய்யும் RGB ஸ்டுடியோ உரிமையாளர் நண்பர் மனோகரன் (சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கடை விளம்பரம், இன்னும் போத்தீஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ் இப்படி பெரும்பாலான முன்னணி விளம்பரங்களின் எடிட்டிங் இவர் கை வண்ணம்தான்)

இவர்கள் எல்லோரும் எனக்கு செய்த உதவிகளுக்கு எல்லாம் எந்த ஜென்மத்தில் எந்த விதத்தில் எப்படி நான் கைமாறு செய்யப் போகிறேன் ?
நிஜமாகவே எனக்கு புரியவில்லை.

சரி. இந்த ஜானின் கதையை விடுங்கள். உங்கள் கதையை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
உங்கள் வாழ்க்கையிலும் கூட எதிர்பாராத விதமாக ஏதாவது பிரச்சினைகளில் நீங்கள்
சிக்கித் தவிக்கும்போது
எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் எத்தனையோ நல்ல உள்ளங்கள் ஓடி வந்து இது போல உதவிகளை செய்து இருக்கக்கூடும்.

அதை எந்த நாளும் மறக்காமல் இருப்பது மட்டுமே நீங்களும் நானும் அவர்களுக்கு செலுத்தும் நன்றி கடன்.

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

நாம் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறர் நமக்கு செய்த உதவிக்கு, மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடு ஆக முடியாது.

 

 

                                                                                                                               John Durai Asir Chelliah

Leave A Reply

Your email address will not be published.