டக்ளஸைத் தாக்க முயன்றவர் பின்னர் நையப்புடைக்கப்பட்டு படுகாயமுற்றார்.

யாழ். ஊர்காவற்றுறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றவர் பின்னர் நையப்புடைக்கப்பட்டார். படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அந்தப் பகுதிக்குச் சென்ற முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் குழப்பம் விளைவிக்கும் வகையில் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டார்.

பலர் சமரசம் செய்ய முயன்றபோதும், அதனை ஏற்க மறுத்து, டக்ளஸ் தேவானந்தாவை நெருங்கித் தர்க்கத்தில் ஈடுபட்ட அவர், திடீரென டக்ளஸ் தேவானந்தா மீது தாக்க முற்பட்டார்.

இதனையடுத்துக் கூடியிருந்தவர்கள் அவரை அங்கிருந்து விரட்டினர்.

அந்தப் பகுதியில் பிரசார நடவடிக்கை நிறைவடைந்த பின்னர், அந்த நபரின் இல்லத்துக்கு வானில் சென்ற சிலர் அவரை நையப்புடைத்தனர்.

இதனால் படுகாயமடைந்த அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.