அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் – சபையில் அநுர அரசுக்கு கஜேந்திரகுமார் அழுத்தம்.

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிக மோசமான சட்டமாக இந்த அரசு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தற்போதும் அந்தச் சட்டத்தை அமுல்படுத்துகின்றது. இது நியாயமற்றது. பல ஆண்டு காலமாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கணக்காய்வு அறிக்கைகளின் ஊடாக முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கஜேந்திரகுமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாட்டின் பிரதான சட்டமாகவுள்ள அரசமைப்பின் முக்கிய அம்சங்களை அமுல்படுத்துமாறு சுமார் 38 ஆண்டு காலமாகத் தேசிய மற்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில்தான் இந்த நாடு உள்ளது.
இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வந்து அரசின் படுமோசமான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
ஆய்வு அறிக்கைகளின் பரிந்துரைகளை கடந்த அரசுகள் செயற்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டி, கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆணை வழங்கினார்கள்.
கடந்த கால ஆய்வு அறிக்கைகளைக் கருத்தில்கொண்டு தேசிய மக்கள் சக்தி மிக மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாகவும், அதற்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை இயற்றப் போவதில்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது ஜனாதிபதித் தேர்தலின்போது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றும் நடைமுறையில்தான் உள்ளது. 12 அல்லது 13 தமிழ் அரசியல் கைதிகள் இன்றும் சிறையில் உள்ளார்கள். இந்தச் சட்டத்தின் பிரகாரம் தவறாகக் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கு அரசு தயாரில்லை.
எஸ்.கிருபாகரன் எனும் அரசியல் கைதி தொடர்பில் இந்த நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன். அம்பாந்தோட்டை சிறைச்சாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒரு வழக்கில் நிராகரிக்கப்பட்டு, அந்த வாக்குமூலம் பலமான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்டது என்று குறிப்பிடப்பட்டு அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இதன் பின்னர் அந்த நிராகரிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு எஸ்.கிருபாகரன் இன்றும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவரது வழக்குகள் கொழும்பு நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் நியாயமற்ற வகையில் அம்பாந்தோட்டை பகுதிக்கு அவர் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். சிறையில் வாடுகிறார்.
அதேபோல் ஆனந்தவர்மன் என்றழைக்கப்படும் அரவிந்தன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மிக மோசமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.” – என்றார்.