குருந்தூர்மலையில் பௌத்த பிக்கு அடாவடி! விவசாயிகள் மூவர் பொலிஸாரால் கைது!!

முல்லைத்தீவு, குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள தமது சொந்த வயல் நிலங்களில் விவசாயம் செய்யும் பொருட்டு அதனை உழவு இயந்திரம் மூலம் தயார் செய்த காணி உரிமையாளர் குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக விகாரை அமைத்துள்ள விகாராதிபதியால் தடுக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குருந்தூர்மலையில் கீழாக தமிழ் மக்களுக்குச் சொந்தமான பல நூற்றுக்கணக்கான நிலங்களைப் பௌத்த பிக்கு தொல்லியல் திணைக்களத்தின் துணையோடு ஆக்கிரமித்து வைத்துள்ளார். இந்தக் காணிகளுக்கு அண்மையாக இன்று காலை குமுழமுனை தண்ணிமுறிப்பு குளத்தின் கீழான நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயம் செய்யும் நோக்கில் குறித்த காணியின் உரிமையாளர் சசிகுமார் என்பவர் தனது பணியாட்கள் மூலம் உழவு செய்துள்ளார்.

இதன்போது அவ்விடத்துக்கு வருகை தந்த குருந்தூர்மலை பௌத்த பிக்கு கல்கமுவ சாந்த போதி மற்றும் தொல்லியல் திணைக்களத்தினர், பொலிஸார் இணைந்து விவசாய நடவடிக்கைகளைத் தடுத்ததோடு விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மூன்று விவசாயிகளை உழவு இயந்திரத்துடன் கைது செய்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு சென்றனர்.

குறித்த காணியின் உரிமையாளர் சசிகுமார் இருதய நோய்க்குச் சிகிச்சை பெறுவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் பணியாளர்கள் மூலமாக விவசாய நடவடிக்கைக்கு ஆயத்தங்களை மேற்கொண்டபோதே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு பணியாளர்களான விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.