நாட்டின் பெரிய மருத்துவமனை CEO போதைக்கு அடிமை: ரூ.1 கோடி சொத்தை விற்று கொகைன் வாங்கிய அதிர்ச்சி சம்பவம்

ஹைதராபாத்: நாட்டிலேயே மிகப்பெரிய மருத்துவமனையின் தலைமை செயல் நிர்வாகியாக இருந்த பெண், தன்னுடைய போதைப் பொருள் பழக்கத்தினால், ரூ.1 கொடி மதிப்பிலான சொத்தை விற்று கொகைகன் வாங்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

போதைப் பொருள் வைத்திருந்தக் குற்றத்துக்காக அவரையும் மும்பையைச் சேர்ந்த மிகப்பெரிய கொரியர் நிறுவன ஊழியரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான கொகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அப்பெண்ணின் வீடு உள்ளிட்ட இடங்களில் தெலங்கானா போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை நடத்திய நிலையில், சைபர் பிரிவு காவல்துறையினர் கடந்த வாரம் 53 கிராம் கொகைன் வைத்திருந்த 34 வயது பெண்ணை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், போதைப்பொருளுக்கு மிக மோசமான நிலையில் அடிமையாகியிருப்பதும், அவருக்குச் சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான சொத்தை விற்பனை செய்து போதைப் பொருள் வாங்கியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தப்பெண் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 24 மணி நேரத்தில் பத்து முறைக்கும் மேல் கொகைன் பயன்படுத்துவதை வாடிக்கையாக வைத்திருந்ததும், இரவில் கூட 2 அல்லது 3 முறை எழுந்து கொகைன் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொகைன் எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இந்த மருத்துவர் தூக்க மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்துள்ளார்.

மே 9ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு 20 நாள்கள் முன்புகூட, காவல்துறையினர், அவரது வீட்டுக்குச் சென்று, அவர் காவல்துறையினர் கண்காணிப்பில் உள்ளார் என்றும், உடனடியாக அவரை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துவிடுமாறும் குடும்பத்தினரிடம் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், காவல்துறையினரை திட்டி, அந்த பெண் மருத்துவர் வெளியேற்றியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், போதைப் பொருள் கொண்டு வந்த கொரியர் ஊழியரை சந்திக்க வீட்டை விட்டு வெளியே வந்த அப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.