266 உள்ளூராட்சி சபைகளில் நாங்களே ஆட்சியமைப்போம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ திட்டவட்டம்.

“பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் நாமே வெற்றி பெற்றுள்ளோம். 266 உள்ளூராட்சி சபைகளில் நாங்களே ஆட்சியமைப்போம். அதற்கான உரிமை எமக்குக் காணப்படுகின்றது.”
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் நாமே வெற்றி பெற்றுள்ளோம். 266 உள்ளூராட்சி மன்றங்கள் என்பது பெரும்பான்மையையே குறிக்கின்றது. இவற்றில் 150 க்கும் அதிகமான சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள், நகர பிதாக்கள், உப நகர பிதாக்கள், மாநகர மேயர்கள், உப மாநகர மேயர்கள் உள்ளிட்டோரை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் நாம் பெயரிடுவோம். அதற்கான உரிமை எமக்கே காணப்படுகின்றது.
குறித்த சபைகளில் 50 சதவீதம் அல்லது அதற்கு அதிகமான உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியிலிருந்தே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளதாகக் கூறப்படும் 14 சபைகளில் ஒன்றுக்கான பதவிகளுக்கான பெயர்களைக் கூட அவர்களால் எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க முடியாது.
காரணம் அவற்றில் ஒரு சபையில் கூட ஐக்கிய மக்கள் சக்திக்கு 50 சதவீதம் இல்லை. அத்தோடு இவற்றில் 4 சபைகளில் நாமும் ஐக்கிய மக்கள் சக்தியும் பெற்றுக்கொண்ட ஆசனங்கள் சமமாகும்.
எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்கும் சபைகளில் அவர்கள் வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துக் காண்பிக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு கட்சிகளிலும், சுயாதீன குழுக்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்டுள்ளவர்களால் அவ்வாறு செயற்பட முடியும் என்று நாம் நம்பவில்லை.
எமக்கு வாக்குகள் குறைவடைந்திருக்கின்றதெனில், எதிர்க்கட்சிக்கு அதிகரித்திருக்க வேண்டுமல்லவா? எனவே, அரசுக்கு வாக்குகள் குறைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் பிரசாரங்கள் அடிப்படையற்றவை.” – என்றார்.