உள்ளூராட்சி சபைகளின் பிரதான பதவிகளுக்கான பெயர் விவரங்களை ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்குக! – தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்து.

உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் பிரதான பதவிகளுக்கு பரிந்துரைக்கப்படுபவர்களின் பெயர் விவரங்களை ஒருவார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவித்துள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளுக்கான தேர்தல் கடந்த வாரம் நடைபெற்று, தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 339 உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் பதவிக்காலம் 2025.06.02 ஆம் திகதியில் இருந்து ஆரம்பமாகும்.
உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளில் பெரும்பான்மையைப் பெற்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் அந்த அதிகார சபைகளின் மேயர், துணை மேயர், தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பெயர் விவ ரங்களை ஒருவார காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
உள்ளூராட்சி மன்ற அதிகார சபைகளின் கன்னிக் கூட்டம் எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதிக்குக் கூடுவதற்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை கோட்டா மட்டத்தில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்க வேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மை இல்லாதவிடத்து, எதிர்வரும் மாதம் 2 ஆம் திகதி சபை கூடும்போது வாக்கெடுப்பு நடைபெறும்.