IPL 2025 கிரிக்கெட் போட்டி இன்று மீண்டும் தொடக்கம் .

பிரிமியர் தொடர் லீக் போட்டியில் இன்று பெங்களூரு, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போர் பதட்டம் காரணமாக நிறுத்தப்பட்ட பிரிமியர் தொடர், 10 நாளுக்குப் பின், இன்று மீண்டும் துவங்குகிறது. பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. பெங்களூருவை பொறுத்தவரையில் 11 போட்டியில் 8ல் வென்று 16 புள்ளியுடன் பட்டியலில் இரண்டாவதாக உள்ளது. இன்று வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக, ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறிலாம்.

தவிர, கடைசியாக பங்கேற்ற 4 போட்டியிலும் வென்ற உற்சாகத்தில் பெங்களூரு களமிறங்குகிறது. நாடுதிரும்பிய பில் சால்ட், லுங்கிடி, டிம் டேவிட், லிவிங்ஸ்டன், ரொமாரியோ ஷெப்பர்டு என பல வெளிநாட்டு வீரர்கள் அணிக்கு திரும்பியது பலம்.

டெஸ்டில் ஓய்வு அறிவித்த கோலி 36, இத்தொடரில் 505 ரன் குவித்து (11 போட்டி) சிறப்பான ‘பார்மில்’ உள்ளார். சென்னைக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் ரஜத் படிதர் (239 ரன்) மீண்டும் வெற்றிக்கு உதவலாம். பவுலிங்கில் 18 விக்கெட் சாய்த்த ஹேசல்வுட், தோள்பட்டை காயத்தால் பங்கேற்பது உறுதியில்லாமல் உள்ளது. குர்னால் பாண்ட்யா (14), புவனேஷ்வர் குமார் (12), யாஷ் தயாள் (10) கைகொடுக்க உள்ளனர்.

கோல்கட்டா அணி 12 போட்டியில் 11 புள்ளியுடன், 5வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரு போட்டியில் வென்றால் 15 புள்ளி பெறலாம். பின் மற்ற அணிகளின் முடிவுக்கு ஏற்ப, அடுத்த சுற்று குறித்து யோசிக்கலாம். இதனால் இன்று வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

கேப்டன் ரகானே (375 ரன்), ரகுவன்ஷி (286), சுனில் நரைன் (215), ரிங்கு சிங் (197) பேட்டிங்கில் உதவுகின்றனர். பவுலிங்கை பொறுத்தவரையில் சுழலில் வருண் சக்ரவர்த்தி (17), சுனில் நரைனுடன் (10), வைபவ் அரோரா (16), ஹர்ஷித் ராணா (15) விக்கெட் வேட்டை நடத்துவது பலம்.

Leave A Reply

Your email address will not be published.