வாக்கு வேட்டைக்காகவே கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம் அமைப்பு – வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குற்றச்சாட்டு.

“வாக்கு வேட்டைக்காகவே கனடா, பிரம்டன் மேயரால் தமிழின அழிப்பு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் வழங்கிய உறுதிமொழியை அவர் நிறைவேற்றியுள்ளார்.”
இவ்வாறு இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“பிரம்டன் பகுதியில் தமிழின அழிப்பு தொடர்பான நினைவகத்தை அமைப்பதற்குரிய நடவடிக்கை 2021 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியுள்ளது. இதற்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர்களாலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனடா வெளிவிவகார அமைச்சருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எமது ஆட்சியிலும் இது விடயத்தில் மீண்டும் தலையிட்டோம். தடுத்து நிறுத்துவதற்கு முயற்சித்தோம்.
எனினும், அந்நாட்டு சட்டத்தின் பிரகாரமே அதனை முன்னெடுப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழின அழிப்பு வாரத்துக்கு எதிராக தடை உத்தரவு பெறுவதற்குக் கனடாவிலுள்ள அமைப்பொன்று நீதிமன்றத்தை நாடியிருந்தாலும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்த நினைவகம் அமைக்கப்பட்டது எனக் கூறப்படுவது பிழை. 2021 ஆம் ஆண்டில் இருந்தே நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பிரம்டன் மேயர் வாக்கு வேட்டைக்காகவே இந்தச் செயலைச் செய்துள்ளார். அப்பகுதியில் அதிகளவான இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர். தேர்தல் கால வாக்குறுதியை அவர் நிறைவேற்றியுள்ளார்.
புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். எனவே, வேறொரு அமைப்பின் பெயரில்தான் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதற்கு எதிராக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்தோம். கனடாவின் புதிய அரசிடமும் தூதுவர் ஊடாக அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.” – என்றார்.