பொற்கோயிலை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை முறியடித்தது எப்படி? இந்திய ராணுவம் விளக்கம்

கடந்த மே 8 ஆம் தேதி பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோயிலை பாதுகாத்தது குறித்து இந்திய ராணுவம் திங்கள்கிழமை விளக்கம் அளித்துள்ளது.

முன்பே கணித்து தாக்குதலை எதிர்கொள்ள கூடுதல் வான் பாதுகாப்பு சாதனங்கள் உபயோகித்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே போர்ப் பதற்றம் நிலவியது. மே 8, 9ஆம் தேதி நள்ளிரவில் இருதரப்பிலும் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் தொடர் ட்ரோன் தாக்குதலை, இந்திய வான் பாதுகாப்புப் பிரிவு எந்த சமரசமும் இன்றி துல்லிய தாக்குதல் நடத்தி அனைத்தையும் நடுவானிலேயே அழித்தது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் மீதான பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை முறியடித்தது தொடர்பாக இந்திய ராணுவத்தினர் திங்கள்கிழமை விளக்கம் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக விளக்கம் அளித்த இந்திய ராணுவத்தின் 15வது படைப் பிரிவின் மேஜர் ஜெனரல் கார்த்திக் சி சேஷாத்ரி, பொற்கோயிலை குறிவைத்து ஏவப்பட்ட அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் இந்திய வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது:

”பாகிஸ்தான் ராணுவத்திடம் சரியான இலக்குகள் இல்லை என்பதை அறிந்திருந்தோம். அவர்கள் இந்திய ராணுவ கட்டமைப்புகள், மத வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்களைக் குறிவைப்பார்கள் என்று எதிர்பார்த்தோம்.

இவற்றில் பொற்கோயில் முக்கிய இலக்காக இருக்கலாம் என்று எண்ணியதால், பொற்கோயிலை பாதுகாக்க நவீன வான் பாதுகாப்பு சாதனங்களை திரட்டினோம்.

முழு தயார் நிலையில் இருந்ததால், வான் பாதுகாப்பு துப்பாக்கி ஏந்திய வீரர்கள், பொற்கோயிலை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய அனைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தினர். இதனால், பொற்கோயிலுக்கு ஒரு கீறல்கூட விழவில்லை” என்றார்.

இதனைத் தொடர்ந்து, ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, எல்-70 வான் பாதுகாப்பு துப்பாக்கிகள் உள்ளிட்ட இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் பொற்கோயிலை எவ்வாறு பாதுகாத்தது என்பது தொடர்பான விளக்கத்தை காட்சிபடுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.