தமிழரசின் மீள் எழுச்சியுடன் அநுரவின் வீழ்ச்சி ஆரம்பம் – பினான்ஸியல் டைம்ஸில் தயான் ஜயதிலக விவரிப்பு.

“ஏ.கே.டி.(அநுர குமார திஸநாயக்க) – ஜே.வி.பி. – என்.பி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஆட்சிப் பீடத்தின் வீழ்ச்சியின் ஆரம்பம்” என்று தலைப்பிட்டு, மதிப்பார்ந்த ‘பினான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வரைந்து உள்ள பிரபல அரசியல் விமர்சகர் தயான் ஜயதிலக, “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மீள் எழுச்சியுடன் அந்த வீழ்ச்சி ஆரம்பித்திருக்கின்றது” என்று கட்டுரையில் உப தலைப்பிட்டிருக்கின்றார்.
நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் நல்லூர் இளம் கலைஞர் மண்டபத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கட்டுரை பற்றிய விடயத்தை அங்கு தமது உரையில் குறிப்பிட்டார்.
இவ்விடயத்தை ஒட்டி அவர் குறிப்பிட்ட விவரங்கள் வருமாறு:-
“இன்று (சனிக்கிழமை) கொழும்பில் இருந்து வெளியாகின்ற – மிக நன் மதிப்பார்ந்த – ‘பினான்சியல் டைம்ஸ்’ என்ற பத்திரிகையில் – அது பரவலாக விநியோகிக்கப்படுவதில்லை, ஆனால் முக்கியஸ்தர்கள் வாங்கி படிக்கின்ற பிரபலமான பத்திரிகையில் – தெளிவாக “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மீள் எழுகை” என்று ஒரு உப தலைப்பிட்டு அரசியல் கட்டுரையாளர் தயான் ஜயதிலக எழுதிய கட்டுரை பிரசுரமாகியுள்ளது.
அந்தக் கட்டுரையின் தலைப்பு ஏ.கே.டி. அரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்பதாகும். The end of the beginning of AKD – JVP – NPP rule. அதில் அவர் மிகத் தெளிவாகச் சொல்லுகின்ற ஒரு விடயம், இதை ஆரம்பித்து வைத்தது இலங்கைத் தமிழரசு கட்சி என்பதுதான்.
இம்மாதம் ஆறாம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிந்து ஏழாம் திகதி அதிகாலை 4 மணிக்கு அவர் எனக்கு ஒரு குறுஞ்செய்தி வாழ்த்து அனுப்பியிருந்தார்.
“இறுமாப்பாகப் பேசுகின்ற இந்த ஆட்சியாளர்களிடமிருந்து எங்களை மீட்டெடுக்கின்ற பணியை நீங்கள் (தமிழரசுக் கட்சி) ஆரம்பித்து இருக்கின்றீர்கள்” என்று வாழ்த்துச் செய்தியை தொடர்ந்து அவர் அனுப்பியிருந்தார். அதற்கு நன்றி என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த வாழ்த்துகள் அங்கிருந்து வருவதற்கு முக்கிய காரணம் உண்டு. எங்களுக்குள்ளேயே இந்த வெற்றியின் முக்கியத்துவத்தை நாங்கள் புரியாமல் – அறியாமல் இருக்கலாம். ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவருக்கு மிக முக்கியமான ஒரு திருப்புமுனை தேர்தல் இது என்பது தெரிகின்றது.
தயான் ஜயதிலக, எங்களின் ஓர் அன்பர் அல்லர். எங்களைச் சிலாகித்துப் பேசுகின்றவரும் அல்லர். எங்களுடைய கொள்கையோடு இணைந்து போகின்றவரும் அல்லர்.
ஆனால், இந்தத் தேர்தல் முடிவு நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. நாட்டில் அந்த மாற்றத்தை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையை முன் நின்று செயற்படுத்துவது தமிழரசுக் கட்சி என்று அவர் வாழ்த்தியிருக்கின்றார். இந்த வாழ்த்துகள் உங்கள் ஒவ்வொருவருக்கும் உரியது.” – என்று கூட்டத்தில் பங்குபற்றிய உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் போட்டியிட்ட தமது கட்சி வேட்பாளர்களைப் பார்த்துக் கூறினார் சுமந்திரன்.