வடக்கு, கிழக்கு எதிரணி எம்.பிக்களை வெள்ளியன்று சந்திக்கின்றார் பிரதமர் – காணி பற்றிய வர்த்தமானி குறித்து கலந்துரையாடப்படும்.

வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அரசால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை (23) நடைபெறவுள்ளது.
காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5 ஆயிரத்து 940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று செவ்வாய்கிழமை (20) பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில், இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்திருக்கும் முரண்பாடுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 1.00 மணிவரை நாடாளுமன்றத்தில் தனது தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தின் காணிகளை நிர்ணயம் செய்வதற்காக இலக்கம் 2430 மற்றும் 28.05.2025 திகதியிட்ட இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அந்த மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் காணி நிர்ணயம் தொடர்பாக எழுந்துள்ள பிணக்குகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) மு.ப. 11.00 – பி.ப. 1.00 மணி வரை நாடாளுமன்றத்தின் குழு அறை 01 இல் எனது தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு உங்களது பங்கேற்பினை மிகவும் கௌரவத்துடன் எதிர்பார்க்கின்றேன்.” – என்று அந்தக் கடிதத்தில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.