நோர்வூட் பிரதேச செயலகம் இடமாற்றப்படாது – ஜீவன் எம்.பியிடம் பிரதேச செயலர் உறுதியளிப்பு.
நோர்வூட் பிரதேச செயலகம் ஹட்டன் நகருக்கு இடமாற்றம் செய்யப்படாமல், தற்போது இருக்கும் கட்டடத்திலேயே தொடர்ந்து இயங்கும் என்று நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானிடம், நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி. கம்லத் உறுதியளித்துள்ளார்.
நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வூட் பிரதேச செயலக, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஹட்டன் – டிக்கோயா நகர சபை மண்டபத்தில் (டிக்கோயா) இன்று நடைபெற்றது.
இதன்போது கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்,
“சிறுநீரக நோய் தாக்கத்துக்கான வைத்திய சேவைகளை வழங்குவதற்காக வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறைகள் நிலவுவதால் அதனை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” – என்று வலியுறுத்தினார்.

“பாடசாலை மாணவர்கள் மத்தியிலான போதைப்பொருள் பாவனையும் சமூகப் பிரச்சினையாகும். மலையகத்திலும் இந்தப் பிரச்சினை உள்ளது. இதனைத் தடுப்பதற்குப் பொலிஸார் ஊடாக நாம் நடவடிக்கை எடுத்திருந்தோம்.
ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒவ்வொரு கண்காணிப்புக் குழு அமைத்தோம். அதில் கட்டாயமாக ஒரு பெண் பொலிஸ் அதிகாரியும் இருப்பார். அந்தச் செயற்றிட்டத்தை மீண்டும் ஆரம்பித்தால் இந்தப் பிரச்சினையை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும்.
மேலும் எங்களது கோரிக்கையை ஏற்று நோர்வூட் பிரதேச செயலக இடமாற்றத்தை நிறுத்தியமைக்காக இந்த நேரத்தில் அரசுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.” – என்றும் ஜீவன் எம்.பி. மேலும் தெரிவித்தார்.
நோர்வூட் பிரதேச செயலக செயலாளர் ஜி.எஸ்.டி கம்லத் தலைமையில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜீவன் தொண்டமான், கலைச்செல்வி, ஹட்டன் – டிக்கோயா நகர சபை செயலாளர், மஸ்கெலியா பிரதேச சபை செயலாளர், நோர்வூட் பிரதேச சபை செயலாளர், அரச நிறுவன அதிகாரிகள், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், கிராம சேவகர்கள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தார்கள்.
