குச்சவெளி, மூதூர் சபைகளில் ஆட்சி அமைக்க மு.கா. – தமிழரசு புரிந்துணர்வு உடன்படிக்கை.

வெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இன்று திருகோணமலை மாநகரில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முகம்மது சரீப் தெளபீக் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியின் திருகோணமலை மாவட்டத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கதிரவேலு சண்முகம் குகதாசன் ஆகியோர் கையொப்பம் இட்டனர் .

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இரண்டு கட்சியினரும் பின்வருமாறு உடன்பட்டுக் கொள்கின்றனர்.

1. குச்சவெளிப் பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதிப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதித் தவிசாளராகவும் செயற்படுவர் .

2. குச்சவெளிப் பிரதேச சபையில் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதிப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதித் தவிசாளராகவும் செயற்படுவர் .

3. மூதூர் பிரதேச சபையில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதிப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதித் தவிசாளராகவும் செயற்படுவர் .

4. மூதூர் பிரதேச சபையில் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் தவிசாளராகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பிரதிநிதிப்படுத்தும் சபை உறுப்பினர் ஒருவர் பிரதித் தவிசாளராகவும் செயற்படுவர்.

நிதி ஒதுக்கம், நிர்வாகம், அதிகாரப் பரவலாக்கம் உள்ளிட்ட மேலும் பல நிபந்தனைகளோடு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட குச்சவெளி மற்றும் மூதூர் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மூதூர் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 5 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர். இதேபோன்று குச்சவெளிப் பிரதேச சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 5 உறுப்பினர்களும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 4 உறுப்பினர்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.