“நீ கும்பிடுவது சிலையின் தலையையா? காலையா?” தோட்ட அதிகாரிகள் தமிழ் இளைஞர் மீது தாக்குதல்!
ஆலயச் சிலை பீடத்தில் பாதணியுடன் காலைத் தூக்கி வைக்க வேண்டாம் என்று சொன்ன, கமலநாதன் இமேஷ்நாதன் என்ற தமிழ் இளைஞரை, “நீ கும்பிடுவது, சிலையின் தலையா? காலையா? உங்கட சாமி தலையிலயாடா காலை வைத்தோம்” எனக் கொச்சைத் தமிழில் திட்டி, அனுர, சந்துன் என்ற இரண்டு, தோட்ட வெளிக்கள அலுவலர்கள் தாக்கியுள்ளனர்.” – என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
“இந்தத் தகவலை எமது அவிசாவளை புவக்பிட்டிய அமைப்பாளர் சசிகுமார் என் கவனத்துக்குக் கொண்டு வந்த நிலையில் இது பற்றி உறுதியான மேலதிக நடவடிக்கை எடுக்குமாறு அவிசாவளை பொலிஸுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன, நிலையப் பொறுப்பதிகாரி ஜெயலத், இளநிலை அதிகாரி ராஜரத்ன ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளேன். அவர்களும் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர்.” – என்றும் மனோ குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றி மனோ எம்.பி. மேலும் கூறியுள்ளதாவது:-
“தற்சமயம் காயமடைந்த கமலநாதன் இமேஷ்நாதன் அவிசாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலின் உயிர்நிலை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.
கமலநாதனைத் தாக்கிய, சந்தேக நபர்கள் இருவரும், மிகவும் சூட்சுமமான முறையில் தாமும் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறி, அதே அவிசாவளை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகக் கூறி தங்கியுள்ளார்கள். இது பற்றியும் நான் பொலிஸ் அதிகாரிகளிடம் கூறியுள்ளேன்.” – என்றார்.
