ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய ஒரு ஷாட் நூற்றாண்டின் சிறந்த ஷாட் என ஏபி.டிவில்லியர்ஸ் பாராட்டு.

நேற்று ஐபிஎல் தொடரில் இரண்டாவது தகுதி சுற்றுப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய ஒரு ஷாட் நூற்றாண்டின் சிறந்த ஷாட் என ஏபி.டிவில்லியர்ஸ் பாராட்டி இருக்கிறார். இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 203 ரன்கள் குவித்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்திருக்க அழுத்தம் பெரிய அளவில் இருந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் இழக்காமல் 41 பந்தில் 87 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்து இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.

ஸ்ரேயாஸ் ஐயர் ஆரம்பத்தில் கொஞ்சம் நேரம் எடுத்து பொறுமையாக விளையாடினார். இந்த நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா தவறாக கணித்து ரீஸ் டாப்லியை பந்து வீச்சுக்கு கொண்டு வந்தார். அங்கிருந்து ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆரம்பித்தது. அதற்குப் பிறகு அவரை எந்த மும்பை பந்துவீச்சாளராலும் தடுத்து நிறுத்தவே முடியவில்லை. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்கள் போல்ட் மற்றும் பும்ரா இருவரும் யார்க்கர் யுக்தியை கையில் எடுத்து பந்து வீச ஆரம்பித்தார்கள்.

ஆனால் இவர்களது அபாயமான யார்க்கர் பந்தை ஸ்ரேயாஸ் ஐயர் தேர்ட் மேன் திசையில் அழகாக விளையாடி பவுண்டரி அடித்தார். குறிப்பாக பும்ரா வீசிய ஆபத்தான யார்க்கர் பந்தை உள்ளே விட்டு கடைசி நேரத்தில் தேர்ட் மேன் திசையில் பவுண்டரி ஆடிய விதம் ஆச்சரியப்பட வைத்தது. இந்த பவுண்டரிகள்தான் ஆட்டத்தில் அழுத்தத்தை எடுக்க மிக முக்கிய காரணமாக இருந்தன.

இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த ஷாட் இதுதான். இந்த நூற்றாண்டில் சிறந்த ஷாட் என்று கூட சொல்லலாம். பும்ரா வீசிய அந்த பந்து உங்களின் கால் விரலை உடைக்கும் அளவுக்கு வருகிறது. நிச்சயமாக அந்த பந்தை உங்களால் எடுத்து விளையாட முடியாது. நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்னால் நிச்சயம் அந்த பந்தை விளையாடியிருக்க முடியாது”

“ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளருக்கு எதிராக மிகச்சிறந்த ஷாட்டை விளையாடி, நேரடியாக மும்பை அணியின் மீது அழுத்தத்தை செலுத்துகிறார். இது மிகவும் அற்புதமான பேட்டிங். இது தூய்மையான, முரட்டுத்தனமான பலம் மற்றும் வலிமை. ஸ்ரேயாஸ் ஐயர் என்ன ஒரு அற்புதமான வீரர்!” என்று பாராட்டி இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.