அரசின் பிரதான கடமையை நாம் சரியாகச் செய்வோம்! – பேரிடர் பாதிப்புகளுக்குப் பின்னால் இருக்கும் நிரந்தரத் தீர்வு குறித்துப் பிரதமர் தெளிவுபடுத்தல்.
பேரிடர்களின்போது பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதுடன், மீண்டும் அவ்வாறான பேரிடர்கள் ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுப்பது அரசாட்சியின் பிரதான பொறுப்பாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இரத்மலானை – கந்தவல வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய நிர்மாணங்களை மேம்படுத்தும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கந்தவலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேல் மாகாண சபையின் ஒழுங்குபடுத்தலின் கீழ், மேல் மாகாண வீதி அமைச்சின் கண்காணிப்பு மற்றும் மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரத்துடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்காக மேல் மாகாண அபிவிருத்தி நிதியத்திலிருந்து 1,104 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், புதிய அபிவிருத்தித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசியல் அதிகாரத்திற்கும் உரிய அரச நிறுவனங்களுக்கும் இடையே காணப்படும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பைப் பாராட்டினார். அத்துடன், கந்தவலப் பிரதேச மக்களும் அங்குள்ள அரச, தனியார் நிறுவனங்களும் பொது நோக்கத்துக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்து இத்திட்டத்துக்கு வழங்கும் பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்தார்.
இத்திட்டத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லத் தலையிட்டுச் செயற்பட்ட கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரைக் குறிப்பிட்ட பிரதமர், இத்திட்டத்தை ஒரு வருடத்துக்குள் நிறைவுசெய்வதே அரசின் இலக்காகும் என்றும் குறிப்பிட்டார்.
தமது அரசின் நகர அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து மேலும் விளக்கிய பிரதமர் ஹரிணி அமரசூரிய,
“நகர அபிவிருத்தி எமது பிரதான பொறுப்பாகும். அதற்காகக் கொழும்பு மாவட்டத்திலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். கடந்த 27 ஆம் திகதி கொழும்பு பேஸ்லைன் வீதி அபிவிருத்திப் பணிகளின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பித்தோம். அதற்காக 2.8 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, 15 ஆயிரத்து 77 மில்லியன் ரூபா செலவிலான கொலன்னாவ மழைநீர் வடிகாலமைப்புத் திட்டத்துக்கும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. வெள்ள அபாயத்துக்கு உள்ளாகும் கொழும்புப் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை வழங்க விரிவான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் வெளிநாட்டுக் கடன்கள் இன்றி, முழுக்க முழுக்க உள்நாட்டு நிதியிலிருந்தே நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அரசின் முறையான நிதி முகாமைத்துவமும் உள்நாட்டு வருமானங்களின் அதிகரிப்பும் திறைசேரியைப் பலப்படுத்தியுள்ளமையால், கடன் பெறாமலேயே அபிவிருத்திப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் இயலுமை கிடைத்துள்ளது.” – என்றார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க,
“மழைநீர் தேங்கும் பிரச்சினையால் இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாகப் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். எமது நோக்கம் தற்காலிகத் தீர்வு காண்பதல்ல; சரியான திட்டமிடலின் அடிப்படையிலான உறுதியான, விஞ்ஞானபூர்வமான தீர்வை வழங்குவதேயாகும். இன்று ஆரம்பிக்கப்படும் 1,104 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டுத் திட்டம், முழுமையான திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமேயாகும். ஒட்டுமொத்த திட்டத்துக்காக 3 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு, இந்நகரம் அழகான வாழ்விடமாக மாற்றப்படும்.” – என்று தெரிவித்தார்.
இரத்மலானை சந்துங்கம விகாராதிபதி பிதுவல ரதனவம்ச தேரர், இரத்மலானை புண்ணியவர்த்தனாராமாதிபதி கொங்கமுவே மேதங்கர தேரர் ஆகியோர் ஆன்மீக ஆசியுரை வழங்கிய இந்நிகழ்வில், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயானந்த ஜயவீர, தெஹிவளை – கல்கிசை மாநகர சபையின் மேயர் கே.டீ. பராக்கிரம சாந்த, கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எயார் வைஸ் மார்ஷல் இந்திக விக்கிரமசிங்க, இரத்மலானை தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் கே.எம்.ஜி. பிரசன்ன பிரேமதாச, மேல் மாகாணப் பிரதம செயலாளர் கே.ஜி. பிரதீப் புஷ்பகுமார, கொழும்பு மாவட்டச் செயலாளர் பிரசன்ன ஜனக குமார உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
