ஒரு சில இடங்களிலாவது ஏனையோருக்கு விட்டுக்கொடுக்க முன்வந்திருக்க வேண்டும் – தமிழரசைக் கடுமையாகச் சாடும் சங்கின் செயலாளர்.
“பெரிய தாய்க் கட்சி என்று சொல்லிக்கொள்கின்ற ஒரு கட்சி ஒரு சில இடங்களிலாவது ஏனையோருக்கு விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை.” – என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (சங்கு) செயலாளர் நாகலிங்கம் இரட்ணலிங்கம் தெரிவித்தார்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் வவுனியா மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ்த் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சி ஒன்று தமிழர்களுடைய நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஏனையோரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
முதலில் நாம் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன்தான் பேச்சுகளை முன்னெடுத்திருந்தோம். எனினும், எந்த விட்டுக்கொடுப்பையும் செய்வதற்கு அவர்கள் முன்வரவில்லை. அவர்களுக்கு இருக்கும் உள்ளகப் பிரச்சினையா அல்லது அந்த உறுப்பினர்களின் மனநிலையா என்பது எனக்குத் தெரியவில்லை.
ஆனால், ஒரு பெரிய தாய்க் கட்சி என்று சொல்லிக்கொள்கின்ற ஒரு கட்சி ஒரு சில இடங்களிலாவது ஏனையோருக்கு விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அது நடைபெறவில்லை.
அந்தவகையில்தான் அவர்களுடன் பேச்சில் ஈடுபட்ட அதைவேளை தமிழ்த் தேசியப் பேரவையுடனும் பேச்சில் ஈடுபட்டிருந்தோம். தமிழ்த் தேசியப் பேரவையைப் பொறுத்த வரையில் சில சபைகளப் பகிர்ந்துகொள்வதற்கும் எமக்குச் சில சபைகளை விட்டுக் கொடுப்பதற்கும் முன்வந்திருந்தார்கள்.
அந்தவகையில் நாங்கள் அவர்களுடன் ஓர் உடன்படிக்கையைச் செய்திருக்கின்றோம். அரசியலில் நாங்கள் வெறுமனே உறுப்பினர்களாக இருந்துவிட்டு நான்கு வருடங்கள் முடிந்ததன் பின்னர் எமது கட்சியின் இருப்பிடம் எங்கே என்று தெரியாத அளவுக்குப் போய்விடுவோம். ஆகவே, அரசியலில் இது சாதாரணமான விடயம்.
அதிகாரம் இருந்தால் மாத்திரமே ஓர் அரசியல் கட்சி ஈர்ப்புடன் இருக்க முடியும். ஆகவே, நாங்கள் ஏனைய கட்சிகளுக்குப் பாரிய மோசமான நிலையை ஏற்படுத்தாத வகையில் சாதகமான இடங்களில் ஆட்சி அமைப்பதற்கான செயற்பாடுகளை நாங்கள் செய்திருக்கின்றோம். ஆகவே, நாங்கள் சில சபைகளில் ஆட்சி அமைக்கலாம் என்று எண்ணுகின்றோம். வவுனியா மாநகர சபையிலும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.” – என்றார்.
