குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது மனைவியின் தலையுடன் கணவன் பொலிஸில் சரண்…

தனது மனைவியை வெட்டிப் படுகொலை செய்தார் எனச் சந்தேகிக்கப்படும் கணவன் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்தப் பயங்கரச் சம்பவம் வவுனியா, புளியங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர், கையில் இருந்த பொலித்தீன் பையினுள் தனது மனைவியின் தலை இருப்பதாகவும், அவரைக் கொலை செய்து காட்டுப் பகுதியில் உடலை விட்டு வந்துள்ளதாகவும் கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிஸார், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கோ.சுகிர்தரன் என்ற நபரை உடனடியாகக் கைது செய்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் சின்னபூவரசன்குளத்தில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டது.

அனந்தர் புளியங்குளம், நொச்சிகுளத்தைச் சேர்ந்த ஆசிரியையான சுகிர்தரன் சுவர்ணலதா வயது 32 என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கர்ப்பிணிப் பெண் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கணவன் – மனைவி இருவருக்கும் இடையில் நீண்ட காலமாகக் குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது.

இந்நிலையில் மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்த கணவன், இன்று காலை நொச்சிகுளம் பகுதியில் இருந்து மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் புளியங்குளம் நோக்கிச் சென்று அங்கு வைத்து அவரைக் கொலை செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாகப் புளியங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.