“மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை சர்வதேச மேற்பார்வையுடன் முன்னெடுக்குக” செம்மணியில் நாளை கவனவீர்ப்புப் போர்!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் சர்வதேச மேற்பார்வையுடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் நாளை வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் நாளை காலை 10 மணியளவில் செம்மணிப் பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“செம்மணியில் மனித எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றமை பல்வேறு சந்தேகங்களையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

அங்கு இதுவரை தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்த பல்வேறு எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

ஆனாலும், அவை தொடர்பான முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை.

இவ்வாறான நிலையில் புதைகுழி தோண்டும் பணிகளை இடைநிறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அங்கு எலும்பு எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

அதேநேரத்தில் சர்வதேச மேற்பார்வையுடன் சர்வதேச நியமங்களுக்கு அமைய புதைகுழி தோண்டும் பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கோருகின்றோம்.

இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முன்னெடுக்கப்படுகின்ற இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.” – என்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.