மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக தமிழரசின் சிவம் பாக்கியநாதன் தெரிவு! – பிரதி மேயராகத் தினேஸ்குமார் பதவியேற்பு.

மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் இன்று புதன்கிழமை போட்டிகள் இன்றி தெரிவு செய்யப்பட்டார்.

இந்த மாநகர சபைக்கான மேயர், பிரதி மேயரைத் தெரிவு செய்யும் நிகழ்வு மாநகர சபை ஆணையாளர் நா.தனஞ்ஜெயன் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.ஏம்.அஸ்மி தலைமையில் மாநகர சபையில் இடம்பெற்றது.

இதன்போது மாநகர சபை மேயராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார்.

பிரதி மேயர் பதவிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வைரமுத்து தினேஸ்குமார், பந்து சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு உறுப்பினர் கே.சத்தியசீலன் ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.

அதையடுத்துப் பிரதி மேயரைத் தேர்ந்தெடுக்கப் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வைரமுத்து தினேஸ்குமார் 18 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சைக் குழு உறுப்பினர் சத்தியசீலன் 4 வாக்குளையும் பெற்றுக்கொண்டதுடன் 12 பேர் நடுநிலையாக இருந்து கொண்டனர்

இதில் 18 வாக்குளைப் பெற்ற தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் வைரமுத்து தினேஸ்குமார் பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.