நாமல் கைது தற்காலிகமானது எனது மக்களுக்காக யாருடனும் இணைந்து அரசியல் செய்வேன் – சபையில் அர்ச்சுனா எம்.பி. தெரிவிப்பு.
நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமையால் தமிழ் மக்கள் அடைந்துள்ள உற்சாகம் தற்காலிகமானது எனவும், நாளை 12ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் மேடையில் தான் ஏறவுள்ளார் எனவும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டத்தின் கீழான தீர்மானம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
“நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமைக்காகத் தமிழ் மக்கள் தற்போது உற்சாகமாக இருக்கின்றனர். ஆனால், அவர் 14 நாள்களில் வெளியில் வந்துவிடுவார் என்பது எங்களுக்குத் தெரியும். அந்த வழக்கு முடிவடையும் போது வேறு யாரோ ஜனாதிபதியாக இருப்பார். எனவே, இத்தகைய தற்காலிக உற்சாகத்தை வைத்துக் கொண்டு எங்களால் அரசியல் செய்ய முடியாது.
‘இனப்படுகொலையாளி’ எனக் கூறப்படும் மஹிந்த ராஜபக்ஷவின் அனுராதபுரம் அரசியல் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளப் போவதாகப் பலரும் பல கதைகளைக் கூறுகின்றனர். வடக்கில் இந்த அரசு தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு எனக்கு அவர்களின் மேடையில் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எனவே, எதிர்வரும் 12ஆம் திகதி (நாளை) மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கூட்ட மேடையில் நான் ஏறுவேன்.
வடக்கு மாகாணத்தில் முறையான தலைமை இல்லாமல் வாழும் சமூகம் தன்னை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால், யாருடன் வேண்டுமானாலும் ஒன்றிணைந்து அரசியல் செய்யலாம். அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தமிழ் மக்களுக்கு எதையாவது செய்யும் என்று நம்பினால் அது முட்டாள்தனமானது.
சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென்றால் சில அரசியல்வாதிகளுடன் பேசவும், சிலரை எதிர்க்கவும் வேண்டிய தேவையில் நாம் இருக்கின்றோம்.
எதிர்காலத்தில் ரணில் விக்கிரமசிங்க அல்லது சஜித் பிரேமதாஸ போன்றவர்கள் அழைப்பு விடுத்தாலும் அவர்களுடன் செல்வேன். இதுவே அரசியலாகும். எதிர்க்கட்சியில் இருக்கும் எவருக்கும் நான் ஒத்துழைப்பு வழங்குவேன். நாமலை நான் அவ்வாறே பார்க்கின்றேன். எனது மக்களுக்காகவே நான் ஒவ்வொரு மேடையிலும் ஏறுகின்றேன்.” – என்றார்.
