காணி கபளீகர வர்த்தமானியை ஆட்சேபித்து சுமந்திரன் வழக்கு.
வடக்கில் சட்ட ஆவண ரீதியாக உரிமை நிரூபிக்கப்படாத தனியாரின் காணிகளை அரசு கபளீகரம் செய்வதற்கு வழி செய்யும் விதத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்ததை இடைநிறுத்தும்படி உத்தரவிடவும், செல்லுபடியற்றதாக அறிவிக்கவும் கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் வழக்கு ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மனுதாரராகத் தாக்கல் செய்துள்ளார்.
காணி ஆணையாளர் நாயகம், காணி உரித்து நிர்ணய ஆணையாளர், காணி அமைச்சின் செயலாளர், காணி அமைச்சர், வடக்கு மாகாண காணி ஆணையாளர் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் செயலாளர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கில் எதிர் மனுதாரர்களாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மேற்படி காணிகளைச் சுவீகரிப்பது தொடர்பான அரசின் வர்த்தமானி அறிவித்தல் கடந்த மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்டது. இது தொடர்பில் மக்களின் கடும் எதிர்ப்பு வெளியானமையை அடுத்து இந்த வர்த்தமானியைக் கைவாங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காணி அமைச்சு கடந்த 27 ஆம் திகதி செய்திக் குறிப்பு ஒன்றின் மூலம் தகவல் வெளியிட்டிருந்தது. எனினும், இதுவரை அந்த வர்த்தமானியைக் கைவாங்குவதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மனுதாரர் சுமந்திரன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், சட்டத்தரணிகளான விரயன், குரியா போன்றோர் முன்னிலையாகி வாதிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
