கெஹலியவின் மற்றைய இரண்டு மகள்களும் மருமகனும் கைதாகிப் பிணையில் விடுவிப்பு!
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மற்றைய இரு மகள்களையும் மருமகனையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று பிற்பகல் உத்தரவிட்டுள்ளது.
கெஹலிய ரம்புக்வெலவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
134 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள சொத்து விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகக் கெஹலிய ரம்புக்வெலவின் மற்றைய இரு மகள்களும் மருமகனும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று புதன்கிழமை கைது செய்யப்ப ட்ட முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, அவரது மனைவி மற்றும் ஒரு மகள் ஆகியோர் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கெஹலிய ரம்புக்வெல, அவரது மனைவி மற்றும் ஒரு மகள் ஆகியோர் நேற்று சொத்து விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதால் கெஹலிய ரம்புக்வெல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சிறைச்சாலை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில், கெஹலிய ரம்புக்வெல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிணை நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றியதால், நீதிமன்ற உத்தரவின் கீழ் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
