வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையும் பல கட்சிகளின் ஆதரவுடன் தமிழரசு வசம்! – தவிசாளராகப் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தெரிவு.

வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் சங்கு கூட்டணியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரி உப தவிசாளராகப் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைக்கான தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகள், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவநந்தினி பாபு தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.

தவிசாளர் தெரிவுக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பாலேந்திரன் மற்றும் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த கார்த்தீபன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன.

இதன்போது தெரிவுகளை இரகசியமாக நடத்துமாறு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு ஆணையாளர் மறுப்புத் தெரிவித்த நிலையில் தேசிய மக்கள் சக்தி, இலங்கைத் தொழிலாளர் கட்சி மற்றும் சுயேச்சைக் குழு உறுப்பினர்கள் 9 பேர் வெளிநடப்புச் செய்திருந்தனர்.

சபையில் மீதம் 18 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்களில் 17 பேர் தெரிவுகளை பகிரங்கமாக நடத்துமாறு வாக்களித்திருந்தனர்.

பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடத்தப்பட்டது.

அந்தவகையில் தவிசாளராகப் பெயர் பிரேரிக்கப்பட்ட பாலேந்திரனுக்கு ஆதரவாக 17 வாக்குகள் கிடைக்கப் பெற்றன.

அவருக்குத் தமிழரசுக் கட்சியின் 5 வாக்குகளும், சங்குக் கூட்டணியின் 3 வாக்குகளும், ஐக்கிய மக்கள் சக்தியின் 3 வாக்குகளும், ஜனநாயகத் தேசியக் கூட்டணியின் 2 வாக்குகளும், ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஒரு வாக்கும், சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்கும், சுயேச்சைக் குழுவின் ஒரு வாக்குமாக 17 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டன.

வெற்றி பெறுவதற்கு 14 உறுப்பினர்களின் ஆதரவு போதுமான நிலையில் 17 வாக்குகள் கிடைக்கப் பெற்ற பாலேந்திரன் புதிய தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உப தவிசாளராக சங்குக் கூட்டணியின் பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரியின் பெயர் பிரேரிக்கப்பட்டது.

உப தவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் கோணேஸ்வரி உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதேவேளை, தமிழ் மக்கள் கூட்டணியின் ஒரு உறுப்பினர் தவிசாளர் தெரிவின் போது நடுநிலை வகித்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.