மட்டு. கிரான்குளத்தில் மரத்துடன் மோதி பஸ் – மூவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்.
கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ், வேகக் கட்டுப்பாட்டை இழந்து மட்டக்களப்பு – கிரான்குளத்தில் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மூவர் படுகாயடைந்துள்ளனர் என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்புக்கு விசேட போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வரும் குறித்த பஸ், கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி, கதிர்காமத்துக்குப் பாதயாத்திரை சென்றவர்களை ஏற்றிக்கொண்டு பயணித்தது.
இந்நிலையில், கல்முனை – மட்டக்களப்பு வீதியிலுள்ள கிரான்குளம் தபால் கந்தோருக்கு அருகாமையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ், வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
