காணாமல்போன பிரபல வர்த்தகர் குப்பையில் இருந்து சடலமாக மீட்பு!

நான்கு நாட்களாகக் காணாமல்போயிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் புத்தளம் – வென்னப்புவை, சிறிகம்பொல பிரதேசத்தில் உள்ள வாகனங்களைப் பழுது பார்க்கும் நிலையம் ஒன்றின் குப்பைக் குழியில் இருந்து நேற்று வியாழக்கிழமை பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் புத்தளம் – மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதியில் இருந்து காணாமல்போயுள்ளார் என்று வென்னப்புவை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன வர்த்தகரின் கார் வென்னப்புவை பிரதேசத்தில் உள்ள வர்த்தகரின் நண்பனின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

வர்த்தகரின் நண்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி இரவு வர்த்தகரும் அவரது 5 நண்பர்களும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்த போது வர்த்தகருக்கும் நண்பர்களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் வர்த்தகர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

பின்னர் நண்பர்கள் அனைவரும் இணைந்து வர்த்தகரின் சடலத்தை வென்னப்புவை, சிறிகம்பொல பிரதேசத்தில் உள்ள வாகனங்களைப் பழுது பார்க்கும் நிலையம் ஒன்றின் குப்பை குழியில் வீசியுள்ளதாக வர்த்தகரின் நண்பனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்துக் கைது செய்யப்பட்ட நண்பனை மாரவில நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வது தொடர்பில் வென்னப்புவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.