இனப்பிரச்சினைகளைத் தீர்க்க அயராது பாடுபட்டவர் சம்பந்தன் – அவரின் நினைவேந்தல் நிகழ்வில் குகதாசன் எம்.பி. தெரிவிப்பு.

இலங்கையில் இனப் பிரச்சினைகளைத் தீர்க்கக் கடினமாகப் பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

மறைந்த பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலை, குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் குகதாசன் எம்.பி. உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“1976 ஆம் ஆண்டு முதல் 2023 வரை மிகவும் நெருக்கமாகச் சம்பந்தனுடன் பணியாற்றியுள்ளேன்.

1933 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி இராஜவரோதயனுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த இரா.சம்மந்தன் ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித மரியால் கல்லூரியில் கற்றார். இதனைத் தொடர்ந்து சூசையப்பர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பாடசாலைகளில் அவர் கற்று சட்டக் கல்லூரிக்கு 1956 களில் நுழைந்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் அப்போது புகழ் பெற்ற சட்டத்தரணியாக விளங்கிய சம்பந்தன், 1977 ஆம் ஆண்டு தொகுதி வாரியான தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவானார்.

மொத்தமாக 32 வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்துள்ளார்.

இனப் பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கைக் குடியரசின் முன்னால் கட்சித் தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிகளுடன் அவர் பேச்சுவார்த்தைகளில் சுமூகமாக ஈடுபட்டுள்ளதுடன் இந்திய நாட்டுத் தலைவர்களுடனும் திறம்படப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.

அதனால் திருகோணமலை என்றால் அது சம்பந்தன்தான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த அவர், 2015 – 2018 வரை இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார்.

1987 இல் இலங்கை – இந்திய மாகாண சபை ஒப்பந்தம், வடக்கு – கிழக்கு தொடர்பான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளிலும் சம்பந்தன் பங்கேற்றிருந்தார்.” – என்றார்.
………………….

Leave A Reply

Your email address will not be published.