ஏர் இந்தியா விமான விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு டாடா சன்ஸ் ரூ.500 கோடி நினைவு அறக்கட்டளை

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.500 கோடி மதிப்பில் நினைவு அறக்கட்டளையை டாடா சன்ஸ் அமைத்துள்ளது.

கடந்த ஜூன் 12-ம் திகதி அன்று குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது. இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர்.

மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

விமானத்தில் உயிரிழந்தவர்களை தவிர விபத்தில் நடைபெற்ற இடத்தில் உயிரிழந்தவர்களையும் சேர்ந்து மொத்தம் இறப்பு எண்னிக்கை 274 ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் விஸ்வாஸ் குமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டும் தப்பித்துள்ளார்.

இதையடுத்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்கப்படும், காயம் அடைந்தவர்களுக்கான மருத்துவ செலவு ஏற்கப்படும் என்று டாடா குழுமம் கூறியிருந்தது.

இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.500 கோடி மதிப்பில் நினைவு அறக்கட்டளையை டாடா சன்ஸ் அமைத்துள்ளது. அதாவது, AI-171 நினைவு மற்றும் நல அறக்கட்டளை என்ற பெயரில் டாடா குழுமம் மும்பையில் பதிவு செய்துள்ளது.

இதில் இறந்தவர்களுக்கு ரூ. 1 கோடி கருணைத் தொகை, பலத்த காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் விபத்தில் சேதமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ஆதரவு ஆகியவை அடங்கும்.

Leave A Reply

Your email address will not be published.