கேரளாவில் கனமழை: 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பருவமழை வேகமெடுத்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் (சிவப்பு எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய தென் மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பகல் நேரங்களில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆற்றைக் கடப்பதையோ அல்லது வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடுவதையோ பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மீட்புப் பணிகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை வானிலை ஆராய்ச்சி மையம் நேற்று வெளியிட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் மணிக்கு 15 மில்லிமீட்டர் மழை பெய்யும் என்றும், மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தனம்திட்டா, இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு மணிக்கு 5 முதல் 15 மில்லிமீட்டர் மழையும், 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றும் வீசும் என்றும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
