உலகக் கிண்ணத்தைப் பணத்துக்காக இலங்கை தாரைவார்த்துக் கொடுத்தது : மஹிந்தானந்த அளுத்கமகே

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தைப் பணத்துக்காக இலங்கை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறிய கருத்து
சூடுபிடித்துள்ளது.

இந்தி- இலங்கை அணிகளுக்கிடையிலான 2011ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியானது, நிர்ணயம் செய்யப்பட்டது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. துறைசார்ந்த அமைச்சர் டலஸ் அழகபெருமவின் பணிப்புரைக்கு அமைவாக, அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்தர, இவ்விடயம்
தொடர்பில், விளையாட்டு தொடர்பிலான குற்றங்களைத் தடுப்பதற்கான விசேட பிரிவில்
முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஒவ்வோர் இரண்டு வாரங்களுக்கும் ஒருமுறை தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.

இந்நிலையில் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நிர்ணயம் செய்யப்பட்டதா என்பது
தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில், அரசாங்கம் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று, மக்கள் விடுதலை
முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கருத்தொன்றைப் பதிவிட்டுள்ள அவர், இவ்விடயம்
தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முழுமையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எதிர்கால நடவடிக்கைகளின் போக்கை அப்போதைய விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று அநுரகுமார திஸாநாயக்க மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான 2011ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபையின் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியானது, நிர்ணயம் செய்யப்பட்டது என
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தமை தொடர்பில், அவரும் சிக்கலை எதிர்கொள்வார் எனத் தெரிகிறது.

ஏனெனில், 2011ஆம் ஆண்ட உலகக் கிண்ணத்துக்கான இலங்கைக் குழாம் தேர்வைக் கையொப்பமிட்டு விளையாட்டுத்துறை அமைச்சராக அங்கிகரித்திருந்த மஹிந்தானந்த
அளுத்கமகே, சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான நடத்தைக் கோவையின்படி
மோசடியை வெளிப்படுத்தாமை தொடர்பிலேயே சிக்கலை எதிர்கொள்ளவுள்ளார். பொறுப்புடன், மேற்குறித்த விடயத்தை வெளிப்படுத்தியதாகத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, நாட்டுக்காக மேலதிக விவரங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை எனக் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்களைத் தான் பங்கெடுக்க வைக்க மாட்டேன் எனத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, எவ்வாறெனினும் போட்டியை நிர்ணயம் செய்வதில் குறிப்பிட்ட குழுக்கள் பங்கெடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி : தமிழ் மிரர்

குமார சங்கக்கார , மகேல மற்றும் டிலான் தமது டியுட்டர் பக்கத்தில் இப்படி கருத்து தெரிவித்துள்ளனர்

Comments are closed.