பொரளையில் கோர விபத்து ஒருவர் பலி; எழுவர் காயம்.

இராஜகிரியவில் இருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் வான் ஒன்று, பொரளை மயான சுற்றுவட்டத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்கள் மீது மோதியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கிரேன் வாகனத்தின் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நபருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இது தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் 8 பேர் காயமடைந்தார்கள் என்றும், அவர்களில் ஆண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போதே உயிரிழந்தார் என்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் இருவர் பெண்கள் என்றும், ஏனைய 5 பேர் ஆண்கள் என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.

விபத்தில் உயிரிழந்தவர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.

Leave A Reply

Your email address will not be published.