மல்லாவி இளைஞரின் படுகொலைக்கு நீதி கோரி இன்று பெரும் போராட்டம்!
கனடா செல்லத் தயாரான நிலையில் கடந்த 29.07.2024 அன்று காணாமல்போன நிலையில் மல்லாவி, வவுனிக்குளம் பகுதியிலிருந்து மறுநாள் சடலமாக மீட்கப்பட்ட மல்லாவி, யோகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தராசன் சஜீவன் என்ற இளைஞரின் மரணத்துக்கு நீதி கோரி மல்லாவி பகுதியில் பொதுமக்கள், பொது அமைப்பினர் மற்றும் வர்த்தக சங்கத்தினர் இணைந்து பாரிய அளவிலான கவனவீர்ப்புப் போராட்டத்தை இன்று காலை மேற்கொண்டிருந்தன

ஒரு வருடமாகியும் மேற்படி இளைஞரின் படுகொலைக்குக் காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், பொலிஸாரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாகக் கூறியும், துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்துக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியே பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்களினால் இன்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மல்லாவி மத்திய பஸ் நிலையத்தில் ஆரம்பமாகிய பேரணி நடை பவனியாக மல்லாவி பொலிஸ் நிலையம் வரை சென்றது.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்றுகூடி ,
சஜீவன் மரணத்திற்கு நீதி வேண்டும், கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்து, விசாரணைகளைத் துரிதப்படுத்தி நீதியைப் பெற்றுத் தா, எமது நண்பனின் மரணத்திற்கு நீதி வேண்டும், வஞ்சகரின் சூழ்ச்சிக்கு முடிவில்லையா, எமது பிள்ளைக்கு நீதி வேண்டும் போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

இதேவேளை, இந்தப் போராட்த்திற்கு ஆதரவாக இன்று மல்லாவி பகுதியில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பு ஒன்றுகூடிய வேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மல்லாவி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விடுப்பில் சென்றுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், இளைஞரின் படுகொலைக்கான நீதியைத் தான் பெற்றுத் தருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான வழக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த காலப் பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்துக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாவிடின் பாரியளவிலான போராட்டத்தைத் தாம் மேற்கொள்வோம் என்று எச்சரித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தனர். அங்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்ற நேரத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் இது தொடர்பில் தான் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் ரவிகரன் எம்.பி. தெரிவித்தார்.
