நாளை முதல் சுய தனிமைப்படுத்தல் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கான 5000 ரூபா நிவாரணப்பொதி நாளையிலிருந்து விநியோகிக்கப்பட வுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

Covid19 தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு அரசினால் இடர் கால நிவாரணமாக 5000 ரூபா பெறுமதியான உணவு பொதிகள் நாளையதினத்திலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் விநியோகிக்கப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் யாழ்ப்பாண குடாநாட்டில் Covid19 தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணியதன் அடிப்படையில், மற்றும் தொற்றுக்குள்ளானவர்கள் பயணித்த பேருந்து வண்டிகளில் பயணம் செய்ததன் அடிப்படையில்
இன்றைய தின தரவின்படி 772 குடும்பத்தைச்சேர்ந்த 1700 பேர்
வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.

சுய தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் நாடுபூராகவும் வழங்கப்பட்டு வரும் நிலையில் யாழ் மாவட்டத்திற்கான இடர் கால நிவாரண பொதிகள் நாளைய தினத்திலிருந்து அந்தந்த கிராம சேவகர்கள் ஊடாக தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.

யாழ் மாவட்டத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளோரின் தரவுகள் கடந்த 1 ம் திகதி உரிய செயலணிக்கு அனுப்பப்பட்டு 2ம் திகதி அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. எனவே முதற்கட்டமாக யாழ் மாவட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் சுயதனிமைப்படுத்தலில் உள்ள 509 குடும்பங்களுக்கு நாளைய தினத்திலிருந்து அந்தந்த பிரதேச செயலகப் பிரிவுகளில் கிராமசேவகர் ஊடாக நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.