ரணிலின் கைது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்தான் – மனோ கடும் கொதிப்பு
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டைக் கூட்டு எதிரணியாக நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”
இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பட்டலந்த வதை முகாம் குற்றச்சாட்டு, மத்திய வங்கி பிணை முறி மோசடி குற்றச்சாட்டு என்பவற்றை மக்கள் முன்வைத்து, இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனக் கூறித்தான் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. அதைச் செய்யுங்கள். அதைச் செய்வீர்களானால் எதிர்க்கட்சிகள் கூட்டாக ஊடக சந்திப்பை நடத்த வேண்டி வந்திருக்காது.
ஆனால், தற்போது ஜனநாயகம் குறித்து கேள்வி எழுந்துள்ளது. பணத்தை மீளக் கோரி ரணிலுக்குக் கடிதம் அனுப்பி இருக்கலாம். அவர் மீளச் செலுத்தி இருக்காவிட்டால் நடவடிக்கை எடுத்திருக்கலாம். எனவே, இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும்.” – என்றார்.
