வைத்தியசாலையில் இருந்து இன்று வீடு திரும்பிய ரணில்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் வீடு திரும்பியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினாலும் ரணில் விக்கிரமசிங்க வீட்டில் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என்று வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவின் உடல் நிலை குறித்து அவரது குடும்ப வைத்தியர் கண்காணிப்புடன் இருத்தல் வேண்டும் என்றும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இலண்டனுக்குத் தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கடந்த 22 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை கடந்த 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர், ரணில் விக்கிரமசிங்க உடல்நலக் குறைவு காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 26 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
…………….

Leave A Reply

Your email address will not be published.