துப்பாக்கிச்சூடுகளால் அதிரும் தென்னிலங்கை – அடுத்தடுத்து 4 இடங்களில் வேட்டு.

தென்னிலங்கையில் நேற்று நள்ளிரவும் இன்று அதிகாலையும் நான்கு இடங்களில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹாவத்த மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், ரிவோல்வர் துப்பாக்கியால் ஒருவரைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த களனியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை கொழும்பு, மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்த வீதியில் அமைந்துள்ள வங்கியொன்றுக்கு முன்பாக, இரண்டு ஆயுததாரிகள் ஒருவரைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, கம்பஹா, நீர்கொழும்பு, குட்டுதுவ பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு, குட்டுதுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை.

மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் வீட்டின் ஜன்னல் மட்டும் சேதமடைந்துள்ளது.

இது இவ்வாறிருக்க, களுத்துறை, பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டின் போது விற்பனை நிலையத்தில் பெண் ஒருவர் இருந்துள்ள நிலையில் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

என். 99 ரக பிஸ்டலால் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டின் போது விற்பனை நிலையத்துக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

மேற்படி நான்கு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
………………

Leave A Reply

Your email address will not be published.