ஓடோடிச் சென்று மஹிந்தவை சந்தித்துப் பேசிய சீனத் தூதுவர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு, விஜேராம அரச இல்லத்தில் இருந்து இன்று பிற்பகல் வெளியேறி அம்பாந்தோட்டை – தங்காலைக்குக் குடியேறச் சென்றுள்ளார். இந்நிலையில், மஹிந்த விஜேராம அரச இல்லத்தில் இருந்து வெளியேற முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் அங்கு சென்று அவரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “விஜேராமவிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து நான் புறப்படுவதற்கு முன்னர், இலங்கைக்கான சீனத் தூதுவரைச் சந்தித்து கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அவரது வருகைக்கு நான் நன்றி தெரிவிப்பதுடன், எமது நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர மற்றும் தனிப்பட்ட உறவு ரீதியான நீடித்த நட்புறவை நான் அன்புடன் நினைவுகூருகின்றேன்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் – இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் பலரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவைச் சந்திப்பதற்கு விஜேராம இல்லத்துக்குச் சென்றிருந்தனர்.

ஆதரவாளர்களின் கோஷங்களுக்கு மத்தியில் அவர் அங்கிருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
………..

Leave A Reply

Your email address will not be published.